பெண் மருந்துவர்மீது பாலியல் துஸ்பிரயோகம்

அனுராதபுர வைத்தியசாலை விடுதியில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட மருத்துவரின் தந்தை நீதிமன்றத்தில் , கண்ணீருடன் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சாட்சியமளித்துள்ளார்.

அனுராதபுரம் வைத்தியசாலை தங்குமிடத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததே மகளின் சம்பவத்திற்குக் காரணம் என நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டினார்.

சம்பவத்திற்குப் பின்னரே அப்பகுதியில் மரக்கிளைகள் வெட்டப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இச்சம்பவத்தால் குடும்பமே வெளிநாடு செல்ல முடிவெடுத்த போதிலும், “நம் தாய்நாட்டிலேயே வாழ்ந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்” எனத் தனது மகள் உறுதியாக இருந்ததால் இலங்கையிலேயே தங்கிவிட்டதாக அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் இராணுவ வீரர், ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், பிணை நிபந்தனைகளை மீறி மற்றொரு குற்றச் செயலில் ஈடுபட்டதாகக் கல்நேவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்ட நீதிபதி இந்திக அத்தநாயக்க, பிரதிவாதியின் பிணையை ரத்து செய்து, வழக்கு முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

வழக்கின் 4-வது சாட்சியான சிறுவர் நல விசேட மருத்துவர் டாக்டர் எஸ். ஏ. நயனி அனுருத்திகா சுரவீர நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

அதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இம்மாதம் 30-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் தடயவியல் மருத்துவ நிபுணர் டாக்டர் சம்பத் சேனதுங்கவை ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.