3 வயது சிறுமி கொடூரக் கொலை- முதியவருக்கு மரண தண்டனை– 60 நாட்களில்- நீதி

 

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் கடந்த மே மாதம் 65 வயது முதியவரால் 3 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், அந்த குற்றவாளிக்கு சிறப்பு போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. குற்றம் நடந்த 60 நாட்களுக்குள் இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு இறுது தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. என்ன நடந்தது? என்பது குறித்து பார்ப்போம்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் அருகே உள்ள நஸ்ராபூர் என்ற கிராமத்தில் கடந்த 01 மே 2026 அன்று 3 வயதுடைய சிறுமி விடுமுறைக்காக தனது பாட்டி வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது, 65 வயதுடைய பீமாராவ் காம்ப்ளே என்ற முதியவர், சாக்லேட் வாங்கி தருவதாகவும், புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டியைக் காட்டுவதாகவும் ஆசை காட்டி சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், சிறுமியை அருகில் இருந்த ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கற்களால் அடித்துக் கொலையும் செய்துள்ளார். இந்த நிலையில், சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கி உள்ளனர். அப்போது, அவரின் உடல் அந்த மாட்டுத் தொழுவத்தில் இருந்த மாட்டுச் சாணத்தில் புதைக்கப்பட்டு இருந்தது பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த கொடூரச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. மேலும், அதே நாளில் புனேவின் பல பகுதிகளில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, அன்றைய தினமெ 65 வயதான பீம்ராவ் காம்ப்ளேவை போலீசார் கைது செய்தனர். பின்னர், இவ்வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

மேலும், இந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அரசு சிறப்பு அரசு வழக்கறிஞராக அஜய் மிசார் நியமிக்கப்பட்டார். போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி, வெறும் 15 நாட்களுக்குள் 82 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். சிறப்பு நீதிமன்றம் மே 28 அன்று குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.

பின்னர், இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று வாதிட்டார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர் மீது கருணை காட்டும்படியும், ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கடந்த ஜூன் 20 ஆம் தேதி இறுதி வாதங்கள் நிறைவடைந்தன.

பின்னர், வழக்கை விசாரித்த புனே சிறப்பு போக்சோ நீதிமன்றம், அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்த பிறகு குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. மேலும், தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி இன்றைய தினம் விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த குற்றவாளி ஏற்கனவே இரண்டு குற்ற வழக்குகளில் இருந்து தப்பியுள்ளார்.

மேலும், அவரிடம் குற்ற உணர்ச்சியோ அல்லது திருந்துவதற்கான எந்த அறிகுறியோ காணப்படவில்லை. எனவே, இவர் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டு, இந்த சம்பவம் ‘அரிதிலும் அரிதான’ வகை குற்றமாக கருதப்படுவதால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பைக் கேட்டு நீதிமன்றத்தில் கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதுமட்டுமல்லாமல், குற்றம் நடந்த 60 நாட்களுக்குள் இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு இறுது தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.