வெப்ப அலையால் ஜெர்மனியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!

 

இந்த ஆண்டில் இதுவரை ஜெர்மனியில் வெப்பம் தொடர்பான சுமார் 5,120 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய பொதுச் சுகாதார மற்றும் தொற்றுநோய் ஆய்வு நிறுவனமாக ரொபர்ட் கோச் தெரிவித்துள்ளது.

இவற்றில் பெரும்பாலான இறப்புகள் ஜூன் மாத இறுதியில் நிகழ்ந்துள்ளன.

அக்காலகட்டத்தில் வாராந்திர சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை வெகுவாகத் தாண்டியது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் — சுமார் 4,270 பேர் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்று RKI தனது வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவற்றில் ஆண்களை விடப் பெண்களே அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனர்.

மிக முதியோர் பிரிவில் பெண்களின் விகிதம் அதிகமாக இருப்பதே இதற்குக் முக்கியக் காரணமாகும்.

ஜெர்மனியிலிருந்து வெளியாகியுள்ள தரவுகள் ஐரோப்பா முழுவதும் நிலவும் ஒரு கவலைக்குரிய சூழலை மேலும் உறுதிப்படுத்துகின்றன.

மேற்கு ஐரோப்பாவில் சராசரியாக 20.74 டிகிரி வெப்பநிலையுடன், இதுவரை பதிவானதிலேயே மிக வெப்பமான ஜூன் மாதம் நிலவியதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை (Copernicus Climate Change Service) வியாழக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஜூன் 20 முதல் 28 வரை நிலவிய வெப்ப அலைகளின் போது, 4,700-க்கும் மேற்பட்ட கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்தந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RKI-இன் தகவல்களின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஜெர்மனியில் வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் மிக அதிகமாகப் பதிவான ஆண்டுகள் 2018 மற்றும் 2019 ஆகும்.

அவ்விரு ஆண்டுகளிலும் முறையே 8,400 மற்றும் 6,900 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.