புதுதில்லியில் கோட் சூட்டோடு முதல் வரிசையில் விஜய் !

 

புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் இன்று நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம், இந்திய அரசியலில் ஒரு புதிய வரலாற்றுத் திருப்பத்திற்கு வழிவகுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 2047-க்குள் ‘விக்சித் பாரத்’ (வளர்ச்சியடைந்த இந்தியா) இலக்கை எட்டுவதற்கான இந்த உயர்மட்ட மாநாட்டில், ஒட்டுமொத்த தேசத்தின் பார்வையும் ஒரே ஒரு நபர் மீது மட்டுமே நிலைத்திருந்தது. அவர் வேறு யாருமல்ல, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தான்! வழக்கமான அரசியல்வாதிகளைப் போலன்றி, கச்சிதமான கோட்-சூட் உடையில், அமித் ஷா, ராஜ்நாத் சிங் போன்ற நாட்டின் உச்சகட்ட தேசியத் தலைவர்களுடன் குழுப் புகைப்படத்தின் ‘முதல் வரிசையில்’ (Front Row) அவர் கம்பீரமாக வீற்றிருந்த காட்சி, டெல்லி அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.Politics

பிரதமர் மோடி “கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவமே இந்தியாவின் பலம்” என்று முழங்கிய அதே மேடையில், தமிழகத்தின் உரிமைகளுக்காக முதலமைச்சர் விஜய் கர்ஜித்த விதம் ஒரு அரசியல் த்ரில்லர் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைப் போல அனல் பறந்தது. மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புக்குத் தன் அரசு தயார் என்று கைகுலுக்கியபடியே, தமிழக மாணவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நீட் (NEET) தேர்வுக்குத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நடத்த வேண்டும் எனப் பிரதமரின் முகத்திற்கு நேராகவே அழுத்தமாக வலியுறுத்தித் தனது முதல் டெல்லிப் பயணத்திலேயே முத்திரை பதித்துள்ளார்.

இதுமட்டுமன்றி, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையையோ அல்லது மும்மொழிக் கொள்கையையோ அமல்படுத்தக் கூறி மறைமுகமாக நெருக்கடி கொடுப்பதை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டினார். ‘சமக்ர சிக்ஷா’ (ஒருங்கிணைந்த கல்வி) திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.3,284 கோடி நிலுவைத் தொகையை, எவ்வித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், இந்தியாவின் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 42 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் தான் உள்ளனர் என்பதைப் பெருமையுடன் சுட்டிக்காட்டிய அவர், அவர்களின் பாதுகாப்பிற்காகத் தன் அரசு உருவாக்கியுள்ள ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ மற்றும் விஸ்தரிக்கப்பட்ட சிசிடிவி நெட்வொர்க் குறித்தும் டெல்லி மேடையில் பெருமிதத்துடன் பேசினார்.

தமிழகத்தின் பொருளாதாரத்தை 2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலராக உயர்த்துவதே தன் இலக்கு என்று முழங்கிய விஜய், விவசாயிகளின் ரூ.2,045 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி, இலங்கைச் சிறைகளில் வாடும் மீனவர்கள் விடுதலை, கோவையில் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் சென்னை-கன்னியாகுமரி அதிவேக ரயில் வழித்தடம் உள்ளிட்ட பல அதிரடித் திட்டங்களை அடுக்கினார். இறுதியாக, நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களுக்கு அடையாளமாகத் திகழும் தொன்மையான ‘திருக்குறளை’ இந்தியாவின் தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்ற மாஸ் கோரிக்கையை முன்வைத்து, “யஹி சமய ஹை, சஹி சமய ஹை” (இதுவே தருணம், சரியான தருணம்) என்ற பிரதமரின் வார்த்தைகளையே பயன்படுத்தித் தனது உரையை பாய்ஸாக நிறைவு செய்தார்.