பாகிஸ்தான் எங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வெடித்த மக்கள் போராட்டம்..

.

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வெடித்துள்ள மக்கள் போராட்டம், தற்போது அந்நாட்டுக்கு எதிரான ஒரு மிகப்பெரிய அரசியல் புரட்சியாக மாறியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்கட்டண உயர்வு, கோதுமை விலை உயர்வு மற்றும் பொருளாதார பாரபட்சங்களுக்கு எதிராக தொடங்கிய இந்த போராட்டம், தற்போது ராணுவத்தை வெளியேற சொல்லும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மக்களின் இந்த எழுச்சியை கண்டு அஞ்சிய பாகிஸ்தான் அரசு, மின்கட்டண குறைப்பு மற்றும் கோதுமை மானியம் போன்ற கண் துடைப்பு சலுகைகளை அறிவித்தது. ஆனால், “எங்களுக்கு சலுகைகள் வேண்டாம்; எங்கள் வளங்கள் மீதான உரிமையும், அரசியல் சுதந்திரமுமே முக்கியம்” என கூறி கூட்டு அவாமி அதிரடி குழுவினர் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனை ஒடுக்க ராணுவம் களமிறக்கப்பட்ட நிலையில், ராவலகோட்டில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் அக்குழுவின் தலைவர் சர்தார் அமன் பேசுகையில், “பாகிஸ்தான் அரசு எங்களின் நீர் மற்றும் இயற்கை வளங்களை கொள்ளையடித்து செல்கிறது. ஆனால், இங்கு எந்தவொரு வளர்ச்சியையும் செய்யாமல், உணவு பொருட்களையும் தடுத்து எங்களை பொருளாதார ரீதியாக ஒடுக்கப் பார்க்கிறது.

இந்தியாவிடமிருந்து எங்களை பாதுகாப்பதாக பாகிஸ்தான் ராணுவம் நாடகமாட தேவை இல்லை; இந்தியாவை எதிர்கொள்வது எங்கள் பிரச்னை. எங்கள் நாட்டை விட்டு பாகிஸ்தான் ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்” என்று அதிரடியாக முழங்கியுள்ளார்.