சிரியாவில் இஸ்ரேலிய படைகளுக்கு எதிர்ப்பு

 

சிரியாவில் நகரத்திற்குள் நுழைய முயன்ற இஸ்ரேலிய படைகளுக்கு உள்ளூர் மக்கள் சாலைகளை மறித்து எதிர்ப்பு தெரிவித்தனர். சிரியாவில் இஸ்ரேலிய படைகள் ஆக்கிரமித்துள்ள ஒரு பாதுகாப்பு இடைவெளிப் பகுதியால் இந்த பகுதியில் நிலவும் பதற்றம் சமீப நாட்களில் வன்முறையாக மாறியுள்ளது. இதனால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர். தற்போது இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் உள்ள ஐநா ரோந்து பணி மேற்கொள்ளும் பகுதிக்கு அருகில் அப்தின் நகர மக்கள் இஸ்ரேலிய ராணுவ ஊடுருவலை எதிர்க்க முயன்றனர்.

கிராமத்தின் மீது பீரங்கி குண்டுகளை வீசுவதற்கு முன்னதாக சுவர்கள் மீது எச்சரிக்கைக்காக துப்பாக்கி சூடு நடத்தியது. தொடர்ந்து இஸ்ரேலிய படைகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இஸ்ரேலிய வீரர்களும், வாகனங்களும் நுழைந்தபோது உள்ளூர் மக்கள் பாறைகளை கொண்டு சாலைகளை மறித்தனர். மேலும் சில இளைஞர்களும் சிறுவர்களும் அந்த படையினரை பின்வாங்கச் செய்ய கற்களை வீசியுள்ளனர்.

இஸ்ரேலிய வீரர்கள் சில நாட்களுக்கு ஒருமுறை வருவதாகவும், சில வீடுகளை சோதனைசெய்வதாக உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் வீடுகளின் கதவை தட்டுவதாகவும், கதவை திறக்காவிட்டால உடைத்துக்கொண்டு உள்ளே செல்வதாகவும், அதன் பின்னர் அங்கிருக்கும், பெண்களும், குழந்தைகளும் அலறுவதாகவும் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய படைகள் இங்கு வருவது மிகவும் அச்சமூட்டும் விஷயமாக இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.