காசா பகுதியில் நடைபெற்ற இறுதிச்சடங்கு ஊர்வலம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்துள்ளனர்.
அதிகாலையில் நடந்த மற்றொரு இஸ்ரேலிய தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர் ஒருவரின் இறுதிச்சடங்கில் மக்கள் கலந்துகொண்டிருந்தபோது இந்தத் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து இந் த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல்
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். அப்போது 251 பேர் பிணைக் கைதிகளாகக் கடத்தப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் காசா மீது கடுமையான போரைத் தொடங்கியது
சுமார் மூன்று ஆண்டுகளாக நீடித்த இந்தத் கொடூரத் தாக்குதல்களால் காசாவின் பெரும்பகுதி முற்றிலும் அழிந்தது. பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே அமெரிக்காவின் முயற்சியால் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒரு தற்காலிகப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இருப்பினும் இஸ்ரேல் இன்னும் முழுமையாகத் தாக்குதல்களை நிறுத்தவில்லை. போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களால் இப்போதும் காசாவில் லட்சகணக்கான பொதுமக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர்.
மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 8 பேர் பலி
போர் நிறுத்த ஒப்பந்தங்கள் அமலில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், காசாவில் அப்பாவிப் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் இன்னும் குறைந்தபாடில்லை. இத்தகைய பதற்றமான சூழலில் மத்திய காசாவின் நுஸீரத் அகதிகள் முகாம் பகுதியில், இறுதிச்சடங்கு ஊர்வலத்திற்காகக் கூடியிருந்த மக்கள் மீது இஸ்ரேலிய ட்ரோன் ஆளில்லா விமானம் நடத்திய திடீர் தாக்குதலில் 8 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அங்குள்ள அல்-பாலாட்டா சந்தைக்கு அருகில் இருக்கும் அகமது யாசின் மசூதிக்கு வெளியே இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. இன்று அதிகாலையில் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்ட ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக, உறவினர்களும் பொதுமக்களும் மசூதிக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தனர். ஊர்வலம் தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, அங்கு வந்த இஸ்ரேலிய ட்ரோன் திடீரென மக்கள் கூட்டத்தைக் குறிவைத்து ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது.
இறுதிச்சடங்கிலும் கொடூரம்
தாக்குதல் நடந்த இடத்தில் உடல்கள் சிதறிக்கிடக்க, காயமடைந்தவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு அருகில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு 8 பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலையும் சேர்த்து, ஒரே நாளில் மட்டும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சந்தைகள், இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 25-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் காசா ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
காசா சுகாதார அமைச்சகம் வேதனை
கடந்த ஆண்டு அக்டோபரில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, இஸ்ரேல் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் போர் நிறுத்தத்திற்குப் பின் மட்டுமே 1,100-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் வேதனையுடன் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.



