கவின் ஆணவக்கொலை திடீர் திருப்பம்

 

சாதியத்தின் கோரம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. வேங்கை வயல், நாங்குநேரி, கவின் கொலை என எண்ணற்ற சாதிய வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழ்நாட்டில் சாதிய ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் அமலில் இருக்கும்போதும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு மோசமான சம்பவம் என்றால் அது ஐடி ஊழியர் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலை ஆகும். இந்த வழக்கில் குற்றவாளி சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணையில் முக்கிய திருப்பமாக, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சஸ்பெண்ட்டான சிறப்பு உதவி ஆய்வாளரும் (எஸ்.ஐ.) கவின் காதலியின் தந்தையுமான சரவணன் (52) நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், அரசு சாட்சியை கொல்ல முயன்ற வேறொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலை வழக்கு நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுர்ஜித், பெண் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி மற்றும் ஜெயபால் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், குற்றம் சாட்டப்பட்டுள்ள சஸ்பெண்ட் எஸ்.ஐ. சரவணன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும், அவரது தரப்பில் வழக்கறிஞர்களும் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

சிபிசிஐடி அளித்த விளக்கம்
சரவணன் ஆஜராகாததற்கான காரணத்தை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் விளக்கினர். அதில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றொரு குற்ற வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். அவரை பி.டி. வாரண்ட் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினர்.

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை அமலில் இருப்பதால், வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு நீதிபதி ஹேமா ஒத்திவைத்தார். மேலும், சுர்ஜித், கிருஷ்ணகுமாரி மற்றும் ஜெயபால் ஆகியோரின் நீதிமன்றக் காவலையும் அதுவரை நீட்டித்து உத்தரவிட்டார்.

அரசு சாட்சியை கொல்ல முயன்ற வழக்கு
சரவணன் சமீபத்தில் திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கில் முக்கிய அரசுசாட்சியாக உள்ள தாராபுரத்தைச் சேர்ந்த தங்கவேல் மீது கடந்த ஜூலை 7-ஆம் தேதி காரில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், அரசு சாட்சியை கொலை செய்ய திட்டமிட்ட சதிக்கு உடந்தையாக இருந்ததாக சஸ்பெண்ட் எஸ்.ஐ. சரவணனை திருப்பூர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்திய தந்தை – மகன் வழக்குகள்
கவின் ஆணவக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுர்ஜித்தின் தந்தையான சரவணன், தற்போது வேறொரு குற்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டிருப்பது வழக்கில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் வெவ்வேறு குற்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது நெல்லை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அடுத்த விசாரணையில் சரவணன் பி.டி. வாரண்ட் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா என்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.