தன்னுடைய இரண்டாவது கணவரைக் கொலை செய்தது ஏன் என்ற தகவலை சர்வசாதாரணமாக அசாம் பெண் போலீஸாரிடம் கூறியிருக்கிறார்.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் 05.06.2026-ம் தேதி நீல நிற சூட்கேஸ் ஒன்று கேட்பார் இன்றி நீண்ட நேரமாக கிடந்தது.
இதுகுறித்து பயணி ஒருவர் அளித்த தகவலின் பேரில் ரயில்வே போலீஸார் அங்குச் சென்று சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் சுமார் 35 வயது மதிக்கத்தக்க, தலை இல்லாமல் ஆண் சடலம் இருந்தது.
மேலும் அந்தச் சடலத்தில் இரு கைகள், இரு கால்கள் இல்லை. நிர்வாணமாக இருந்த சடலத்தை பிளாஸ்டிக் சாக்கு மூட்டை, மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் கவர் ஆகியவற்றை கொண்டு சுற்றி வைத்திருந்தனர்.
இதையடுத்து பெரம்பூர் ரயில்வே போலீஸார், கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு மேல் விசாரணைக்காக சென்னை பெருநகர காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் பிரவேஸ் குமார், இணை கமிஷனர் மனோகர் ஆகியோரின் மேற்பார்வையில் புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் தலைமையில் 3 உதவி கமிஷனர்கள், 7 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அலி என்று தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரை யார் கொலைசெய்தது என விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில்,
“கொலைசெய்யப்பட்ட அமீர் அலியின் சடலத்தில் சுற்றப்பட்டிருந்த சிவப்பு, மஞ்சள் நிற பிளாஸ்டிக் கவர், தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயன்படுத்தப்படுவை என்பதை முதலில் கண்டறிந்தோம்.
உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரித்தோம். விசாரணையில் அந்த கவரை யார் பயன்படுத்தியது என்ற விவரம் தெரியவில்லை.
அதனால் அடுத்த கட்டமாக பெரம்பூர் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியிலிருக்கும் சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தோம்.
100-க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்த போது ஆட்டோ ஒன்று பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஆண், பெண் ஒருவரை இறக்கிவிட்டதும் அவர்கள் கையில் நில நீற சூட்கேஸ் வைத்திருப்பதும் தெரியவந்தது.
உடனடியாக அந்த ஆட்டோவின் விவரங்களை சேகரித்தோம். அப்போது ஆட்டோவை செல்போன் செயலி மூலம் பதிவு செய்த தகவல் கிடைத்தது. தொடர்ந்து பதிவு செய்தவரின் செல்போன் நம்பரை பெற்று அதில் தொடர்பு கொண்டோம்.
அப்போது போனை எடுத்து பேசிய பெண், உடனடியாக இணைப்பை துண்டித்துவிட்டார். இந்தச் சமயத்தில்தான் அந்தப் பெண்ணின் புகைப்படம் அவரின் செல்போன் டி.பி-யில் இருந்தது.
அதைப் பார்த்ததும் அந்த போட்டோவை மருத்துவமனை ஊழியர்களிடம் காண்பிடித்து விசாரித்தோம். அப்போது, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஹீமா கதூன் என்று தெரியவந்தது. இந்த மருத்துவமனைக்கு வரும் புற்றுநோயாளிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பவர் என்ற விவரத்தைக் கூறினர்.
இதையடுத்து பெண் ஒருவரை ரஹீமாவிடம் போனில் பேச வைத்து புற்றுநோய் சிகிச்சைக்காக மும்பையிலிருந்து சென்னை வந்திருக்கிறோம். எங்களுக்கு ரூம் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய முடியுமா என கேட்க கூறினோம்.
உடனே ரஹீமா, தேனாம்பேட்டையில் உள்ள ஒரு இடத்துக்கு வரும்படி கூறினார். அதன்படி மஃப்டியில் நாங்கள் அங்கு சென்றோம். பின்னர் ரஹீமாவைப் பிடித்து விசாரித்தோம்.
அப்போது அவர், தனக்கு தமிழ் தெரியாது, இந்தி, அசாமி ஆகியவை மட்டுமே தெரியும் எனக் கூறினார். அதனால் அவரிடம் எங்களால் விசாரிக்க முடியவில்லை.
இந்தத் தகவலை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றதும் இந்தி தெரிந்த இன்ஸ்பெக்டர் ஒருவரை உயரதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அவர், ரஹீமாவிடம் விசாரித்தார். அப்போதும் ரஹீமா, நீங்கள் எதற்காக என்னிடம் விசாரிக்கிறீர்கள். எனக்கு எதுவும் தெரியாது எனக் கூறினார்.
உடனடியாக ரஹீமாவை அழைத்துக் கொண்டு அவரின் தங்கியிருந்த தேனாம்பேட்டை வீட்டுக்குச் சென்றோம். அங்கு கொலை நடந்ததற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. பக்கத்து வீடுகளில் விசாரித்தபோதும்
இரண்டு நாள்களுக்கு முன்பு ரஹீமாவின் வீட்டிலிருந்து தூர்நாற்றம் வீசியது. அது குறித்து அவரிடம் விசாரித்தபோது எலி செத்து விட்டதாக தெரிவித்தார் என்ற தகவலை கூறினார்கள்.
இந்தச் சூழலில்தான் ரஹீமாவின் கணவர் அமீர் அலி குறித்து ரஹீமாவிடம் கேட்டதற்கு அவர் என்னை விட்டு பிரிந்துச் சென்றுவிட்டார் என தெரிவித்தார்.
இந்தத் தகவல் எங்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ரஹீமாவிடம் விசாரணை நடந்து கொண்டிருந்த சமயத்தில் அவரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தோம். அப்போது அவர், அசாமைச் சேர்ந்த அஸ்ரஃப் அலி (36) என்பவருடன் தொடர்ச்சியாக பேசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அஸ்ரஃப் அலி குறித்து ரஹீமாவிடம் கேட்டபோது அவரின் முகம் மாறத் தொடங்கியது.
அஸ்ரஃப் அலி
இதையடுத்து ரஹீமா தங்கியிருந்த வீட்டை சல்லடை போட்டு ஆய்வு செய்தோம். அப்போது வீட்டில் ரத்தக்கறை படிந்த பெட் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அது குறித்து விசாரித்தபோது அமீர் அலியை கொலை செய்த தகவலை ரஹீமா ஒப்புக்கொண்டார். அவர் அளித்த தகவலின்படி அஸ்ரஃப் அலியைப் பிடித்து விசாரித்தோம்.
அப்போது அமீர் அலியின் டார்ச்சர் காரணமாக அவரை இருவரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர் ” என்றனர்.
கொலை நடந்தது எப்படி? என போலீஸ் உயரதிகாரி ஒருவர் விரிவாக நம்மிடம் விவரித்தார்.
“ரஹீமாவின் முதல் திருமண வாழ்க்கையில் பெண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக குழந்தையையும் கணவரையும் பிரிந்த ரஹீமா, வேலை தேடி சென்னை வந்திருக்கிறார்.
அப்போது அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தேனாம்பேட்டை பகுதியில் தங்கியிருந்தனர். அவர்களோடு ரஹீமா தங்கியிருந்து கடந்த 2020-ம் ஆண்டு முதல் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவி செய்யும் வேலையைச் செய்து வந்திருக்கிறார்.
அதில் நல்ல வருமானம் கிடைத்து வந்த நிலையில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார். அப்போதுதான் அமீர் அலியுடன் ரஹீமாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
கடந்த ஆறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. குறிப்பாக ரஹீமாவின் முதல் கணவர் குறித்து பேசி அமீர் அலி, ரஹீமாவை துன்புறுத்தி வந்திருக்கிறார்.
மேலும் அமீர் அலிக்கு சில பெண்களுடனும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் ரஹீமா மனஉளைச்சலுக்குள்ளாகியிருக்கிறார்.
இந்தச் சமயத்தில்தான் அஸ்ஸாமில் நாட்டு மருந்து கடை நடத்தி வரும் அஸ்ரஃப் அலியுடன் ரஹீமாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
அவரிடம் தனக்கு அமீர் அலியால் நடக்கும் கொடுமைகளைச் சொல்லி கதறி அழுதிருக்கிறார் ரஹீமா. அப்போது ரஹீமாவுக்கு ஆறுதலாக பேசிய அஸ்ரஃப் அலி, அடிக்கடி சென்னை வந்து ரஹீமாவையும் சந்தித்திருக்கிறார்.
இந்தத் தகவல் அமீர் அலிக்கு தெரிந்ததும் ரஹீமாவை அடித்து உதைத்திருக்கிறார். இந்தச் சூழலில் கடந்த மாதம் அமீர் அலிக்கும் அஸ்ஸாமைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமண ஏற்பாடு நடந்திருக்கிறது.
அப்போது அமீர் அலி அந்தப் பெண்ணுடன் சேர்ந்து போட்டோ எடுத்திருக்கிறார். அதை ரஹீமா பார்த்ததும் அதிர்ச்சியடைந்து அமீர் அலியிடம் சண்டை போட்டிருக்கிறார். அப்போது ரஹீமாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அமீர் அலி அவதூறாகப் பேசியிருக்கிறார். இதையடுத்துதான் அமீர் அலியை கொலைசெய்ய இருவரும் பிளான் போட்டிருக்கிறார்கள்.
2.06.2026 அன்று, ஏழு தூக்க மாத்திரைகளைப் பாலில் கலந்து அமீர் அலிக்கு கொடுத்திருக்கிறார் ரஹீமா. பாலைக் குடித்ததும் மயக்கமடைந்த அமீர் அலியை இருவரும் சேர்ந்து 03.06.2026-ம் தேதி கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்.
பின்னர் சடலத்தை அப்புறப்படுத்த தலை, கை, கால்களை துண்டு துண்டாக வெட்டியிருக்கிறார்கள். அதை தன்னுடைய செல்போனில் ரஹீமா போட்டோ எடுத்து பார்த்து ரசித்திருக்கிறார்.
இதையடுத்து தலை, கை, கால்கள் இல்லாத அமீர் அலியின் சடலத்தை ஒரு சூட்கேஸில் வைத்து, 05.06.2026 அன்று காலை பெரம்பூர் ரயில் நிலையத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
அதன் பிறகு 06.06.2026 அன்று செங்கல்பட்டு பகுதியில் தலையை புதைத்து வைத்திருக்கிறார்கள். கை, கால் பாகங்களைத் தங்கள் வீட்டருகே உள்ள கழிவுநீர்க் கால்வாயில் வீசியிருக்கிறார்கள்.
இதையடுத்து அவற்றை மீட்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறோம். கொலை செய்யப்பட்ட அமீர் அலியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறோம். விசாரணையின் போது ரஹீமா எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி சர்வசாதாரணமாகவே இருந்தார்.
அதைப் போல அமீர் அலியை கொலைசெய்து கூறு போட்ட அஸ்ரஃப் அலி நாங்கள் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் அமைதியாகவே இருந்தார். அதனால் ரஹீமா, அஸ்ரஃப் அலியின் பின்னணி குறித்து விசாரிக்க தனிப்படை போலீஸ் டீம் விரைவில் அஸ்ஸாமுக்குச் செல்ல உள்ளது. இதுவரை நடத்திய விசாரணையில் இருவர் மீதும் எந்த வழக்குகளும் இல்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது” என்றார்.




