எம்மில் சிலருக்கு கால்களில் வீக்கமும், வயிற்றுப் பகுதியில் வீக்கமும் ஏற்பட்டிருக்கும். இத்துடன் சுவாசத்திணறலும்.. கழுத்துப் பகுதியில் உள்ள நரம்புகள் சீரற்ற தன்மையிலும் இருப்பதையும் காணலாம். இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால்.. அவருக்கு மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் கன்ஸ்டிரிக்டிவ் பெரிகார்டிடிஸ் எனும் இதயம் சார்ந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என அவதானிக்கலாம். இதற்கு தற்போது நவீன சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
கன்ஸ்ரிக்டிவ் பெரிகார்டிடிஸ் என்பது உங்களது இதயத்தை சுற்றி அமைந்துள்ள திரவம் நிறைந்த பையான பெரிகார்டியம் எனும் சவ்வின் சுவர் பகுதி.. இயல்பான அளவைவிட அதிக அளவில் தடிமனாக மாற்றம் பெற்றாலோ அல்லது இயல்பான அளவை விட அதிக அளவில் விறைப்பு தன்மையை பெற்றாலோ உண்டாகும் பாதிப்பாகும். இதன் காரணத்தினால் உங்களின் இதயம் இயல்பாக இயங்குவதில் தடை ஏற்படுகிறது. அத்துடன் இதய செயலிழப்பு பாதிப்பையும் உண்டாக்குகிறது. எனவே இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால்… உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
வைத்திய ரீதியாக விவரிக்க வேண்டும் என்றால்… உங்களுடைய இதயத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இரண்டு அடுக்குகளைக் கொண்ட திரவம் நிரம்பிய ஒரு சவ்வு பகுதிதான் பெரிகார்டியம். இயல்பான சூழலில் இருக்கும் போது இந்த இதயத்தை பாதுகாக்கும் சவ்வு உறை- நெகிழ்வாகவும்… நீட்சி அடைய கூடியதாகவும் இருக்கும். இதனால் இதய துடிப்பின் இடையில் உடலுக்கு தேவையான ரத்தத்தையும் நிரப்புவதற்காக இதயம் விரிவடைந்து சுருங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் இந்த பெரிகார்டியம் எனும் சவ்வின் சுவர் பகுதி- இயல்பான அளவை விட தடிமனாகவோ… விறைப்பாகவோ மாறிவிட்டால்.. இதயம் இயல்பாக விரிவடைவதில் குறைபாடு உண்டாகிறது. இதனால் உடலுக்கு தேவையான குருதியை பூர்த்தி செய்ய இதயம் தடுமாறுகிறது. இதனால் ஏற்படும் கூடுதல் அழுத்தமே இதய செயலிழப்புக்கும் வழி வகுக்கிறது.
தலைசுற்றல், சோர்வு, நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், கால் மற்றும் வயிற்றுப் பகுதியில் வீக்கம் ,பசியின்மை… போன்ற அறிகுறிகளை இவை ஏற்படுத்தும். பாக்டீரியா தொற்று ,காயம், நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் குறைபாடு… என பல்வேறு காரணங்களால் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.
எக்கோ கார்டியோ கிராம்- இம்மியூனிட்டி டெஸ்ட்- எக்ஸ்ரே- சிடி ஸ்கேன்- எம் ஆர் ஐ என பல பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். இவர்களுக்கு தற்போது நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக சத்திர சிகிச்சை மற்றும் மருந்தியல் சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.




