உக்ரைனில் பல இடங்களில் நள்ளிரவு ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 9 பேர் உயிரிழந்ததாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் நாட்டில் கீவ் முதலான பல நகரங்களில் ரஷ்யா பாரிய தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது.
ரஷ்யா தனது தாக்குதல் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தும் என அண்மையில் உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவு ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு மிக மோசமான தாக்குதலை ரஷ்யா நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பல கட்டடங்கள், மக்கள் குடியிருப்பு பகுதிகள் பலத்த சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் இந்த இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
கீவ் நகரில் மாத்திரம் குழந்தைகள் உட்பட 58 பேர் காயமடைந்துள்ளதாக நகர ஆளுநர் மிகோலா கலாஷின்க் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நாடி அங்கெல்லாம் தங்குவதற்கு கூடாரங்களை அமைத்து வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.




