உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா ஏவுகணைகள், டிரோன்களை ஏவி கடும் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் பலியாகினர். 21 பேர் படுகாயமடைந்தனர். இதற்கு பதிலடியாக ரஷ்ய துறைமுகத்தில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதில் கப்பல்கள் சேதமடைந்தன. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 4 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நேற்று காலை ரஷ்ய ராணுவம், ஏவுகணைகள், டிரோன்களை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 6 பேர் பலியானார்கள். 21 பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்படுவதற்கு முன்பே, கீவ் நகரின் சோலோமியான்ஸ்கி, டேர்னஸ்ட்கி மற்றும் டினிப்ரோவ்ஸ்கி பகுதிகளில் பலத்த வெடிசத்தங்கள் கேட்டதாக உக்ரைன் அவசர சேவை பிரிவு தெரிவித்தது. இந்த தாக்குதலில் சோலோமியான்ஸ்கியில் உள்ள 3 மாடி கட்டிடம் மற்றும் சேமிப்பு கிடங்கு தீப்பற்றி எரிந்தது. டினிப்ரோவ்ஸ்கியில் மற்றொரு கட்டிடம் தீப்பற்றி எரிந்தது.
ரஷ்யா 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்பட மொத்தம் 12 ஏவுகணைகளையும், 121 டிரோன்களையும் ஏவியது. இதில், பெரும்பாலான டிரோன்கள் மற்றும் சில ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யாவின் அசோவ் துறைமுகத்தை குறி வைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 21 டேங்கர் கப்பல்கள்,2 சரக்கு கப்பல்கள் மற்றும் பல்வேறு சிறிய படகுகள் சேதமடைந்தன என்று உக்ரைன் தெரிவித்தது. ரஷ்யா கூறுகையில், உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். டிரோன் தாக்குதலில் 4 கப்பல்கள் மட்டும் சேதமடைந்தன. உக்ரைன் ஏவிய 178 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன என்று ரஷ்யா தெரிவித்தது.



