அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன ஆயுதங்களின் மூலம், இஸ்ரேல், உலகின் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒன்றான பலஸ்தீனில், அப்பாவி ஆண்கள், பெண்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை கண்மூடித்தனமாக படுகொலை செய்தும், வாட்டி வதைத்தும், காஸாவை அழித்தும் வருகின்ற நிலையில், அதே இஸ்ரேலிடம் இருந்து, அரபு நாடுகள் 2025 ஆம் ஆண்டில் 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளன.
தங்களது சொந்த மக்களை கொடூரமாக அடக்கி ஒடுக்கி, தங்கள் ஆட்சிகள், அதிகாரம், செல்வம் மற்றும் வசதிகளை தக்க வைத்து, உறுதி செய்து கொள்வதற்காக, அமெரிக்காவையும் இஸ்ரேலையும் திருப்திப்படுத்தும் முயற்சியில், இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் மற்றும் தங்கள் சொந்த மக்களையும் கூட கைவிட்டுள்ள அரபு சர்வாதிகாரிகளின் காட்டிக் கொடுப்பை இது தெட்டத் தெளிவாக அம்பலப்படுத்தி உள்ளது.
காஸாவில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு அரபுலக ஆட்சியாளர்கள் அளித்த ஆதரவு, மேற்குக் கரையில் பலஸ்தீனர்களை அவர்களின் பாரம்பரிய வீடுகள் மற்றும் தாயக பூமிகளிலிருந்து விரட்டுவதில் இஸ்ரேல் காட்டிய மிலேச்சத்தனம், காட்டுமிராண்டித்தனம் ஆகியன மீதான அரபுலக ஆட்சியாளர்களின் அலட்சியம், ஜெருசலேமில் உள்ள மஸ்ஜித் அல் அக்சாவைப் பாதுகாக்க அவர்கள் தவறியமை,
அங்கு இஸ்ரேலிய காட்டுமிராண்டிகள் பலஸ்தீனர்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி பலஸ்தீன நிலங்களை கொள்ளையடித்த போது அதை கண்டு கொள்ளத் தவறியமை என்பன உட்பட ஏனைய எல்லா நிலைகளிலும் அரபுலக ஆட்சியாளர்களின் கையாளாலாகத் தனம், நயவஞ்சகம், காட்டிக் கொடுப்பு என எல்லாமே இப்போது உலகின் முன்னால் அம்பலமாகி உள்ளது.
உதாரணமாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் மேற்பார்வையில் எகிப்தில் முழு அளவிலான ஜனநாயக ரீதியில் நடந்த முதலாவது பொதுத் தேர்தலில், இஸ்லாமிய போக்கு அரசொன்றை அறிமுகப்படுத்துவதே அந்தத் தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் குறிக்கோளாக இருந்தது. அதை ஏற்றுக் கொண்ட அந்த தேசத்து மக்கள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் பிரதிநிதி முகமது முர்ஷியை 2012 ஜூன் 24, அன்று எகிப்தின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளராக அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்தனர்
அவர் 2012 ஜூன் 30 அன்று முறைப்படி பதவியேற்றார். இந்தப பதவியேற்பு அமெரிக்காவில் எச்சரிக்கை மணிகளை ஒலிக்கச் செய்தது.
எகிப்தில் மலர்ந்த புதிய ஜனநாயகம் பற்றி இங்கிலாந்து, ஐரோப்பா, இஸ்ரேல் என்பன தற்போதைய மதச்சார்பற்ற அரபு சர்வாதிகாரிகளை அச்சுறுத்தின. இதனால் அரபு தலைநகரங்களில் ஒருவித நடுக்கம் ஏற்பட்டது.
இதன் விளைவு அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, சவூதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை பயன்படுத்தி எகிப்தில் சுமார் பதினொரு பில்லியன் டொலர்களை செலவிடச் செய்து, செயற்கையான எரிபொருள் மற்றும் உணவு பற்றாக்குறையை உருவாக்கினர்.
இதன் விளைவாக எகிப்தில் ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது முஸ்லிம் சகோதரத்துவ அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. இந்த செயல்பாட்டில் அவர்கள் எகிப்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் கொன்றனர்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய சட்டவிரோத போர் ஏற்படுத்திய விளைவுகளால், அரபுலக ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் அமெரிக்க எஜமானர்களுக்கும் இடையில் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களையும் சவூதி அரேபியா, கத்தார், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள பரவலான அமெரிக்க இஸ்ரேல் இராணுவ வளங்களையும் ஈரான் தனது கடுமையான பதிலடி மூலம் அழித்துள்ளது. ஈரான் வழங்கிய எதிர்பாராத இந்த பதிலடி இந்தப் பிராந்தியத்தின் சர்வாதிகார ஆட்சிகளை இப்போது கதிகலங்க வைத்துள்ளது.
ஈரானிய தாக்குதல்களிலிருந்து சர்வாதிகார அரபுலக ஆட்சியாளர்ளை பாதுகாக்க அமெரிக்கா தவறிவிட்டது. தங்கள் ஆட்சிகளின் பாதுகாப்பிற்காக இனி அமெரிக்காவை நம்ப முடியாது என்பதை அவர்கள் இப்போது உணரத் தொடங்கி உள்ளார்கள்.
அமெரிக்காவையும் இஸ்ரேலையும் திருப்திப்படுத்தும் நோக்கில் ஈரானை எதிர்த்துப் போராடுவது பயனற்றது என்பதை மிகவும் தவிர்க்க முடியாத விதத்தில் அவர்கள் உணர வேண்டியதாயிற்று.
தற்போது வளைகுடா நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக, அவர்களது மாபெரும் அண்டை நாடான ஈரானுடன் தங்கள் உறவுகளை மேம்படுத்தத் தொடங்கி உள்ளன. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய போரில் பங்கேற்றதாகக் கூறப்பட்ட ஐக்கிய அரபு அமீரகம், தனது உறவுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஈரானுக்கு பத்து பில்லியன் டொலர்களை வழங்க இணங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.
இவ்வாறான ஒரு பின்னணியில் தான் அரபு சர்வாதிகாரிகள் 2025 ஆம் ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து 2.9 பில்லியன் டொலர் ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. இதில் யாருடன் சண்டையிடுவதற்காக இந்த ஆயுதக் கொள்வனவு? என்பதுதான் பதில் காண முடியாத ஒரு கேள்வியாகும்.
லண்டனை தளமாகக் கொண்ட அரசியல் ஆய்வாளர், பத்திரிகையாளர் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளர் ரொபர்ட் இன்லகேஷ், ஜூன் 9 ஆம் திகதி ‘கன்சோர்ட்டியம் நியூஸ்’ என்ற இணைய தளத்தில் வெளியிட்ட ஒரு கட்டுரையில், அரபு சர்வாதிகாரிகள் 2025 ஆம் ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்கள் வாங்கியதைப் பற்றிய தெளிவான விவரங்களை வழங்கியுள்ளார்.
இஸ்ரேல் தனது இனப்படுகொலைக்கு மத்தியில், 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவை விட, அரேபியர்களுக்கு அதிக ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது. இதுவரை ஐரோப்பா தான் இஸ்ரேலின் மிகப்பெரிய கொள்வனவாளராக இருந்துள்ளது. எவ்வாறாயினும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, ஏனைய எந்த ஒரு நாட்டையும் விட இந்தியாயா தான் அதிகளவான இஸ்ரேலிய ஆயுதங்களை வாங்கியுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு (SIBAT) வெளியிட்ட தரவை திரைப்பட தயாரிப்பாளர் ரொபர்ட் இன்லகேஷ் வெளியிட்டுள்ளார். 2025 ஆம் ஆண்டில் இஸ்ரேலின் ஆயுத ஏற்றுமதி 19.2 பில்லியன் டொலராக இருந்துள்ளது. 2024 ஐ விட இது 30 சதவீதம் அதிகமாகும். அதுமட்டுமன்றி இன்றைய கால கட்டம் வரை இது ஒரு சாதனையாகவும் பதிவாகி உள்ளது.
இஸ்ரேலின் ஆயுதங்களை வாங்குவதற்கான, பல அரசாங்கங்களின் விருப்பத்தின் காரணமாக, இஸ்ரேலை புறக்கணிப்பதற்கான அழைப்புகள், ஆயுத உற்பத்தியாளர்களுக்கு எதிரான நேரடி நடவடிக்கைகள், மற்றும் இஸ்ரேலிய ஆயுத நிறுவனங்களை ஆயுத கண்காட்சிகளில் இருந்து தடை செய்வதற்கான பிரசாரங்கள் என்பன தோல்வியடைந்துள்ளன.
இதன் விளைவாக இஸ்ரேலிய ஆயுத ஏற்றுமதியில் 2024 ஆம் ஆண்டிலிருந்து 30 சதவீதத்திற்கும் அதிகமான இலாப அதிகரிப்பு பதிவாகி உள்ளது. இது தொடர்ச்சியாக சாதனை படைத்துள்ள ஐந்தாவது ஆண்டாகும்.
விற்பனையின் அதிகரிப்பு இரண்டு முக்கிய முன்னேற்றங்களுடன் ஒத்துப்போகின்றது. முதலாவது “ஆபிரகாம் உடன்படிக்கைகள் என்ற பெயரில் “இயல்பாக்குதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, அரபு மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் அதிகரித்துள்ளன. இரண்டாவது காசா இனப்படுகொலை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலின் தொழில்நுட்பத்தின் சந்தைப்படுத்தல்.
அமெரிக்கா, இஸ்ரேலின் நெருங்கிய சர்வதேச பங்காளியாகக் கருதப்பட்டாலும், 2025 ஆம் ஆண்டில் இஸ்ரேல் அமெரிக்கர்களுக்கு விற்பனை செய்ததை விட, அதிகளவான ஆயுதங்களை தனது அரபுலக நட்பு நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது. இது ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கின்றது. இஸ்ரேலின் ஆயுத ஏற்றுமதியில் வட அமெரிக்கா 13 சதவீதமாகவும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா 2.9 பில்லியன் டொலர் அல்லது 15 சதவீதமாகவும் இருக்கின்றன.
உதாரணமாக, ஐக்கிய அரபு இராச்சியம் இந்த ஆண்டு இஸ்ரேலுடன் இணைந்து புதிய ஆயுத முறைமைகளை வாங்குவதற்கும், உருவாக்குவதற்கும் என தனியான ஒரு நிதியை நிறுவியுள்ளது.
அபுதாபியும் குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரானுக்கு எதிராக டெல் அவிவ் உடன் ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் அதன் வான் பாதுகாப்பு அமைப்புகளை அதன் இஸ்ரேலிய நண்பர்களுடன் ஒருங்கிணைத்துள்ளது.
2020இல் ஆபிரகாம் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட உடனேயே, இஸ்ரேலின் ஆயுத ஏற்றுமதி இலாபங்கள் 2021 ஆம் ஆண்டில் 11.3 பில்லியன் டொலராகவும், 2022 ஆம் ஆண்டில் 12.5 பில்லியன் டொலராகவும் அதிகரித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க பகுதி அதன் புதிய அரபு நட்பு நாடுகளுக்கு செய்யப்பட்ட விற்பனையாகும்.
அண்மையில் மொராக்கோவின் இரண்டாவது பெரிய ஆயுத விநியோகஸ்தராகவும் இஸ்ரேல் மாறியுள்ளது. ஆனால், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் மொராக்கோ மட்டும் இஸ்ரேலிய ஆயுதங்களை வாங்கவில்லை. முஸ்லிம் பெரும்பான்மை நாடான அஸர்பைஜான் கடந்த ஆண்டுகளில் அதன் ஆயுதங்களில் 70 சதவீதத்தை இஸ்ரேலிடமிருந்தே வாங்கியுள்ளது. அஸர்பைஜானைப் போலவே ஈரான் இஸ்லாமிய குடியரசின் எல்லையில் அமைந்துள்ள துர்க்மெனிஸ்தானும் இஸ்ரேலிய இராணுவ தொழில்நுட்பத்தை வாங்குகின்றது.
பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடந்த ஆண்டு பலஸ்தீன அரசை அங்கீகரித்தமை, 2023 அக்டோபர் 7, முதல் இஸ்ரேலுக்கு எதிராக சில அடையாள நடவடிக்கைகளை எடுத்தமை என்பன போன்ற நகர்வுகள் பற்றி புலம்பியிருந்தாலும், ஐரோப்பா 2025 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய ஆயுதங்களை மிகப்பெரிய அளவில் வாங்கியுள்ளது.
இது 6.9 பில்லியன் டொலர்களாக விற்பனை அல்லது மொத்த இஸ்ரேலிய ஏற்றுமதியில் 36 சதவீதமாக உள்ளது. இந்த நிலையிலும் அதிகளவு இஸ்ரேலிய ஆயுதங்களை வாங்கிய ஒரே நாடு இந்தியாவாகவே உள்ளது.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் பற்றி உலகளாவிய பொதுவான சலசலப்புக்கு மத்தியில், அரசாங்கங்கள் தங்கள் மக்களின் ஜனநாயக விருப்பத்தையும், சர்வதேச சட்டத்தையும் பெரும்பாலும் புறக்கணித்து வந்துள்ளமை தெரிகின்றது.
இஸ்ரேலின் போர்க்குற்றங்கள் குறித்து குரல் கொடுக்கும் அதே அரங்குகளில் “போர்-சோதனைகள்” செய்யும் ஆயுதங்களை வாங்குவதும் தீவிரமாகத் தொடர்கின்றது. இதுவே மிகவும் வேடிக்கையானதாகும். காஸா மீதான தாக்குதல் தொடங்கிய ஆண்டிலிருந்து ஒட்டு மொத்தமாக இஸ்ரேலின் ஆயுத ஏற்றுமதி இலாபம் 56.1 சதவீதம் அதிகரித்துள்ளது



