லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா போராளிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஓயாமல் சண்டை நடந்து வருகிறது. டிரம்ப் பலமுறை மிரட்டியும் இரு தரப்பும் சண்டையை நிறுத்தவில்லை. இதனால் இப்பிரச்னைக்கு தீர்வு காண, அதிபர் டிரம்ப் மாற்று யோசனை ஒன்றை சொல்லியுள்ளார். அதாவது, ஹிஸ்புல்லாவை எதிர்த்து போரிடும் பொறுப்பை சிரியாவிடம் ஒப்படைக்கலாம் என கூறியிருக்கிறார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவின் சர்வாதிகார அதிபர் பஷார் அல் அசாத்தை வீழ்த்தி புதிய அரசை அமைத்த, போரில் அனுபவம் வாய்ந்த சிரியா கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் ராணுவத்தை விட ஹிஸ்புல்லாவை வேரறுப்பதில் சிறப்பாக செயல்பாடுவார்கள் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட விருப்பமில்லை என சிரியா அதிபர் அஹ்மத் அல் ஷாரா கூறிய பிறகும் டிரம்ப் தனது யோசனையில் உறுதியாக உள்ளார். இது லெபனான், இஸ்ரேல் இரு தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அல் ஷாரா தலைமையிலான சிரியா அரசை இஸ்ரேல் சந்தேகத்துடனே பார்ப்பதால், இது குறித்து விவாதிக்க உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி உள்ளது.



