வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் வாக்களிப்பு உரிமை குறித்து அமைச்சரவை பரிசீலனை!

வெளிநாடுகளில் வாழும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு வசதியாக பல முன்மொழிவுகள் குறித்து அமைச்சரவை தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரஜைகள் தேர்தல் நாளன்று அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு நேரில் சென்று வாக்களிப்பது ஒரு முன்மொழிவாக உள்ள அதேவேளை, டிஜிட்டல் முறையிலான வாக்களிப்பு முறையை மற்றொரு முன்மொழிவு பரிந்துரைப்பதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை பிரஜைகள் எவ்வாறு வாக்களிக்கலாம் என்பது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு இந்த உபகுழுவானது தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஏனைய பங்குதாரர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று முன்மொழிவுகளை தயாரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.