ரூ 20 கோடியில் தங்க காசு மோசடி! சென்னை பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி கைது

 

தங்க காசு மோசடி வழக்கில் காவல் துறை பெண் ஆய்வாளர் ஷீலா மேரி நேற்று இரவு சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், ஷீலா மேரியை சிறையில் அடைத்தனர். சென்னை ராயபுரத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஷீலா மேரி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது குறைந்த விலைக்கு தங்க காசு தருவதாக ஆசை வார்த்தை கூறி 100-க்கும் மேற்பட்ட போலீஸாரை ஏமாற்றினாராம்.

இது காவல் துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தங்க காசு மோசடி தொடர்பாக பலர் புகார் கொடுக்காமல் இருந்து வந்தனர். ஆனால் ஒரு சில போலீஸார் கோடிக்கணக்கில் பணம் செலுத்தியதால் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் பெண் காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் பிரபு மணி என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இவர் கொடுங்கையூர் பகுதியில் அலுவலகம் வைத்து நடத்தி வந்தாராம். அப்போது காவலர்கள் குறைந்த பணத்தில் தங்கம் கொடுப்பதாக கூறியதை நம்பி பணம் கொடுத்து தங்க காசு வாங்கினாராம். முதலில் சிறிய தொகைக்கு தங்க காசு வாங்கிய போலீஸார்,

பின்னர் பெரிய தொகைகளுக்கு தங்க காசை வாங்க முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாறு பெரிய அளவில் தங்க காசு வாங்க பணம் கொடுத்தோருக்கு தங்க காசு தராமல் பிரபு ஏமாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் பணம் கொடுத்தவர்கள் தங்க காசை கொடு இல்லாவிட்டால் கொடுத்த பணத்தை கொடு என கேட்டதால் பிரபுமணி தனது அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டதாக தெரியவந்தது. இந்த தங்க காசு திட்டத்தில் சேருமாறு பெண் ஆய்வாளர் ஷீலா மேரி உதவியாக இருந்ததாகவும் இது போல் ஆட்களை பிடித்துக் கொடுத்தால் ஷீலாவுக்கு குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்பட்டதாகவும் அப்படி சம்பாதித்த பணத்தில் அந்த பெண் ஆய்வாளர் நிறைய சொத்துகளை வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி ரூ 20 கோடிக்கு மேல் மோசடி செய்ய பிரபுமணிக்கு உதவியதாக ராயபுரம் பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியை கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்து வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

இவர் எப்படியும் கைது செய்யப்படுவார் என கருதி முன் ஜாமீன் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் வைத்து ஷீலா மேரியை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் தங்க காசு மோசடி குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.