இடிபாடுகளுக்கு அடியில் சுமார் 40 பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றி, உயிருடன் இருப்பவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் இந்தக் கோரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அனுமன் கோவிலில் கட்டப்பட்டு வந்த மண்டபத்தின் கூரை திடீரென்று யாரும் எதிர்பாரத விதமாக இடிந்து விழுந்தது.இந்த சம்பவத்தால், பல பக்தர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 30 முதல் 40 பக்தர்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர். இன்று சனிக்கிழமை என்பதால், கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தீடிரென இடிந்து விழுந்த மேற்க்கூரை
உயிரிழப்புகள் மற்றும் காயங்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை. இருப்பினும், பலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கட்டிடம் இடிந்து விழுந்த செய்தி அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.




