தமிழகத்தின் மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்ட முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய துணை நிறுவனங்களுடன் மின் உற்பத்தி, மின் தேவை, மின் விநியோகம் மற்றும் மின் கட்டமைப்பை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தமிழகம் முழுவதும் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் போதுமான அளவில் இருப்பதால், மாநிலத்தில் மின்சார பற்றாக்குறை எதுவும் இல்லை.
இருப்பினும், சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களின் சில இடங்களில் உள்ள பழமையான மின் உபகரணங்கள், நிலத்தடி மின் கேபிள் பழுதுகள், அதிகரித்துள்ள மின் பயன்பாடு, பராமரிப்புப் பணிகள், பல்வேறு சேவைத் துறைகள் சாலை தோண்டும் பணிகளின்போது எதிர்பாராதவிதமாக மின்கேபிள்கள் சேதமடைவது போன்ற காரணங்களினால் பகிர்மான அளவில் அவ்வப்போது மின்தடைகள் ஏற்படுகின்றன.
இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, சென்னை மாநகரப் பகுதியில் மட்டும் ரூ.2,275 கோடி மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் ரூ.10,109 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் 231 புதிய துணை மின் நிலையங்கள் ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில், முதல்வர் விஜய் மின் பழுது காரணமாக பெறப்படும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சரி செய்ய அறிவுறுத்தினார். மேலும், மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்யவும், மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்தவும் ஆணையிட்டார்.
சென்னையைப் பொறுத்தவரை ஏற்கெனவே உள்ள 125 ரோந்து குழுக்களை சுற்றுப்பணியில் ஈடுபடுத்தவும், அக்குழுவினர் அவசரப் பணிகளுக்காக புகார் பெறப்படும் இடங்களுக்குச் சென்று புகார் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, பழுதை சரி செய்திடவும், பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க மின்சார வாரியம் மற்றும் அதன் நிறுவனங்கள் சீரிய முறையில் செயலாற்ற வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தலைமைச் செயலர் மு. சாய்குமார், மின் வாரிய தலைவர் ஜெ. ராதாதிருஷ்ணன், நிதித்துறை செயலர் மு.அ. சித்திக், எரிசக்தித் துறை செயலர் அனில் மேஷ்ராம், தமிழ்நாடு மின் உற்பத்திக்கழக மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்தராவ், பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




