படக்குறிப்பு,தாக்குதலுக்கு உள்ளான கப்பலில் இருந்த இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்தியக் கொடி ஏந்திய கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை (மே 14) அன்று கண்டனம் தெரிவித்துள்ளது, இது “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் கூறியுள்ளது.
இதற்கிடையில், கடல்சார் பாதுகாப்பு கண்காணிப்பு முகமைகளும் இந்தியாவும் இந்த சரக்குக் கப்பல் மூழ்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளன.
புதன்கிழமை அதிகாலை நடந்த இந்தத் தாக்குதல் குறித்து மேலதிக தகவல்களை இந்திய அரசு வழங்கவில்லை.
இந்திய வெளியுறவு அமைச்சகம் கப்பலின் பெயரை வெளியிடவில்லை மற்றும் கப்பல் மீதான தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதையும் தெளிவுபடுத்தவில்லை.
ஆனால் இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம் அந்த கப்பலின் பெயர் ‘ஹாஜி அலி’ (Haji Ali) என்று கூறியுள்ளது.
புதன்கிழமை காலை ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்தியக் கொடி ஏந்திய கப்பல் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதை நாங்கள் கண்டிக்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“கப்பலில் இருந்த அனைத்து இந்தியக் குழுவினரும் பாதுகாப்பாக உள்ளனர், அவர்களை மீட்ட ஓமன் அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அமைச்சகம் கூறியுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் முகேஷ் மங்கள் இந்தச் சம்பவம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
“ஒரு சோகமான சம்பவம் குறித்து நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ‘ஹாஜி அலி’ என்று பெயரிடப்பட்ட மரத்தாலான, மோட்டார் பொருத்தப்பட்ட அந்தக் கப்பல் சோமாலியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜாவிற்குச் சென்று கொண்டிருந்தது. 2026 மே 13 அன்று காலையில், அது ஓமன் கடல் பகுதியில் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கப்பலில் தீப்பிடித்தது, அதைத் தொடர்ந்து அது மூழ்கியது.” என்று முகேஷ் மங்கள் கூறினார்.
“கப்பலில் இருந்த மொத்தம் 14 பணியாளர்களும் ஓமன் கடலோரக் காவல்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, ஓமனில் உள்ள திப்பா (Dibba) துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.” என்றும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்தைத் தவிர, கடந்த 72 மணி நேரத்தில் எந்தவொரு இந்தியக் கப்பல் அல்லது இந்தியக் குழுவினரைக் கொண்ட கப்பல் மீதும் தாக்குதல் சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்று அவர் கூறினார்.
14 பணியாளர்களைக் கொண்ட குழுவினருடன் இருந்த சரக்குக் கப்பலின் பெயர் ‘ஹாஜி அலி’ என்று கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான வான்கார்டை (Vanguard) மேற்கோள் காட்டி செய்தி முகமையான ஏஎஃப்பி தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, ஹோர்மூஸ் நீரிணைக்கு தெற்கே, ஓமனின் லிமா கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து கப்பல் மூழ்கியது.
சோமாலிலாந்தின் பெர்பெராவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஷார்ஜாவிற்கு அந்தக் கப்பல் கால்நடைகளை ஏற்றிச் சென்றதாக வான்கார்ட் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ‘ஹாஜி அலி’ என்று பெயரிடப்பட்ட அந்தக் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு “டிரோன் அல்லது ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது”.
வான்கார்ட் கூற்றுப்படி, “கப்பல் தீப்பிடித்தது, இதனால் பணியாளர்கள் கப்பலை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, பின்னர் கப்பல் மூழ்கியது.”
இந்தியா டுடே தகவலின்படி, ஹாஜி அலி கப்பல் குஜராத்தின் ‘தேவ்பூமி துவாரகா’ மாவட்டத்தில் உள்ள சலாயா துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 3:30 மணியளவில் ஓமனின் வடக்குக் கடற்கரையில் உள்ள லிமா அருகே கப்பல் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வெடிபொருள் மீது மோதியது.
அந்த வெடிப்பு கப்பலில் தீப்பிடிக்கவும், அதன் சமநிலையை இழக்கவும் காரணமானது. அதைத் தொடர்ந்து கப்பல் மூழ்கியது.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரானுக்கு இடையே போர் தொடங்கியதிலிருந்து, இந்தச் சம்பவம் தவிர்த்து குறைந்தது இரண்டு இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன.
இந்தியா கடந்த மாதம் டெல்லியில் உள்ள இரானியத் தூதரை அழைத்து இந்தச் சம்பவங்கள் குறித்து தனது ‘ஆழ்ந்த கவலையை’ வெளிப்படுத்தியது.
இரான் போர் வளைகுடா பிராந்தியத்தில் வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மோதல் தொடங்கியதில் இருந்து பல கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன அல்லது சேதமடைந்துள்ளன.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியதிலிருந்து, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களின் நடமாட்டத்தை இரான் பெருமளவில் கட்டுப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 8 அன்று நடைமுறைக்கு வந்த பலவீனமான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்கா இரானியத் துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையைத் தொடர்கிறது.
வளைகுடா பிராந்தியத்தின் கடல் வழிகள் மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான இடையூறுகள் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தை அதிக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
இது இந்தியாவைப் போன்ற எரிசக்தி இறக்குமதி நாடுகளின் மீதான அழுத்தத்தை அதிகரித்து வருகிறது.
பிரிக்ஸ் (BRICS) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்காக இந்தியா வந்த இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இந்தத் தாக்குதலைப் பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் இரானியக் கடற்படையுடன் ஒத்துழைக்கும் அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் ஹோர்மூஸ் நீரிணை திறந்திருக்கும் என்று கூறினார்.
சமீபத்தில் ஹோர்மூஸ் நீரிணையில் இந்தியாவைச் சேர்ந்த கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரு மாலுமி உயிர் இழந்துள்ளார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.
கப்பல் உரிமையாளரின் கூற்றுப்படி, சரக்குகளை ஏற்றிய பிறகு, அந்த கப்பல் பாரசீக வளைகுடாவில் உள்ள துபை துறைமுகத்திலிருந்து ஏமனில் உள்ள அல் மக்கல்லா துறைமுகத்திற்குப் புறப்பட்டது.
ஆனால் போருக்குப் பிறகு கப்பல் போக்குவரத்திற்கு மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ள ஹோர்மூஸ் நீரிணையை அடைந்தபோது, அது தாக்கப்பட்டு ‘சிறிது நேரத்திலேயே மூழ்கியது’.
கப்பல் கவிழ்ந்தபோது, அதில் இருந்த 18 மாலுமிகள் கடலில் குதித்தனர்.
கப்பலின் உரிமையாளரின் கூற்றுப்படி, அவர்களில் ஐந்து பேர் ஏற்கனவே தாக்குதலின்போது பலத்த காயமடைந்திருந்தனர். உதவி கிடைப்பதில் தாமதமானதால் அல்தாஃப் கெர் என்ற ஒருவர் உயிரிழந்தார்.
தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, உயிரிழந்த மாலுமியின் குடும்பத்தினர் அவரது உடலை துபையில் அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஹோர்மூஸ் நீரிணைக்கு செல்லும் அபாயத்தை அந்தக் கப்பல் சந்தித்தது ஏன்?
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வெளிநாட்டுத் துறைமுகங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்ல மரக்கப்பல்களைப் பயன்படுத்தும் முறை பல நூற்றாண்டுகள் பழமையானது.
இந்தப் படகுகள் குஜராத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள நாடுகளுக்கும் சரக்குகளைக் கொண்டு செல்கின்றன.
இத்தகைய படகுகள் துவாரகா மாவட்டத்தில் உள்ள வெராவல், போர்பந்தர், சலாயா துறைமுகங்கள், ஜாம்நகரில் உள்ள ரோஜி துறைமுகம் மற்றும் கட்ச் பகுதியில் உள்ள துனா, முந்த்ரா மற்றும் மாண்ட்வி துறைமுகங்களில் இருந்து சரக்குகளை எடுத்துச் செல்கின்றன.
இந்தியப் பாய்மரக் கப்பல்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆடம் பயா பிபிசி நியூஸ் குஜராத்தியிடம் கூறுகையில், சலாயாவைச் சேர்ந்த ‘அல் ஃபைஸ் நூர்-இ-சுலைமானி-1’ என்ற கப்பல் மே 7 ஆம் தேதி மதியம் துபை துறைமுகத்திலிருந்து வளைகுடா நாடான ஏமனில் உள்ள அல் மக்கா துறைமுகத்திற்குப் புறப்பட்டது என்றார்.
“மே 8 ஆம் தேதி அதிகாலையில் அந்தக் கப்பல் தாக்கப்பட்டு மூழ்கத் தொடங்கியது. பல மணிநேரத்திற்குப் பிறகு, சலாயாவைச் சேர்ந்த ‘பிரேம்சாகர்’ என்ற கப்பல், அல் ஃபைஸ் நூர்-இ-சுலைமானி-1 கப்பலின் மாலுமிகளுக்கு உதவ சென்றடைந்தது” என்று ஆடம் பயா தெரிவித்தார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போரில் சேதமடைந்த முதல் இந்தியக் கலன் ‘அல் ஃபைஸ் நூர்-இ-சுலைமானி-1’ தான் என்று ஆடம் பயா கூறுகிறார்.
அல் ஃபைஸ் நூர்-இ-சுலைமானி-1 கப்பலின் உரிமையாளர் சுலைமான்பாய் பையா பிபிசியிடம் பேசுகையில், ஏப்ரல் முதல் வாரத்தில் அமெரிக்கா-இரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட பிறகு, ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பலைச் செலுத்தும் அபாயத்தை மேற்கொண்டதாக கூறினார்.
“அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நிலைமையை மேம்படுத்தியிருந்தது. அனைத்தும் இயல்பாகத் தோன்றியது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியாவுக்கு ஏற்றிச் செல்லும் டாங்கர்களை ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்ல இரான் அனுமதித்திருந்தது. எனவே, பத்து நாட்களுக்கு முன்பு ஏமனிலிருந்து துபைக்கு என் கப்பலை அனுப்பினேன்,” என்று சுலைமான்பாய் கூறினார்.
“துபை செல்லும் வழியில் ஹோர்மூஸ் நீரிணையைக் கடப்பதில் என் கப்பலுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. துபை சென்ற பிறகு, உடனடியாகப் புறப்பட வேண்டாம் என்று முடிவு செய்தேன், ஆனால் பத்து நாட்களுக்குள் கப்பலில் சரக்குகள் ஏற்றப்பட்டன. பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்மூஸ் நீரிணையில் நிலைமை அமைதியாக இருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுங்கத்துறையும் எனது கப்பல் துபை துறைமுகத்திலிருந்து வெளியேற அனுமதித்தது, அதாவது கடலுக்குச் செல்வது பாதுகாப்பானது என்பதே அதன் பொருள்” என்றார் சுலைமான்பாய் .
துபை நேரப்படி மே 7 மதியம் 1 மணியளவில் ‘அல் ஃபைஸ் நூர்-இ-சுலைமானி’ கப்பல் துபை துறைமுகத்திலிருந்து ஏமனுக்குப் புறப்பட்டதாக சுலைமான்பாய் தெரிவித்தார்.
“சுமார் பன்னிரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, கப்பல் ஹோர்மூஸ் நீரிணைக்குள் நுழைந்தது. அருகில் உள்ள கப்பல்களுக்கும் கடலோர முகமைகளுக்கும் இந்தக் கப்பல் எந்த நாட்டுக்குச் சொந்தமானது என்பதைத் தெரியப்படுத்த எங்களது கப்பலின் டிரான்ஸ்பாண்டர் செயல்பாட்டில் இருந்தது. தூரத்திலிருந்தே முகமைகள் இது ஒரு இந்தியக் கப்பல் என்பதை அடையாளம் காணும் வகையில் இந்தியத் தேசியக் கொடியும் பறக்கவிடப்பட்டிருந்தது” என்றார் அவர்.
மேலும் அவர் கூறுகையில், “சரக்குகள் இருப்பதைக் குறிக்கும் விளக்குகளும் எங்கள் கப்பலில் எரிந்து கொண்டிருந்தன. இருப்பினும், மே 8 அதிகாலை 1 மணியளவில் ஓமன் கடற்கரையிலிருந்து எங்கள் கப்பல் தாக்கப்பட்டது. தாக்குதலுக்கு முன்னதாக எங்கள் கப்பலுக்கு யாரும் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை”என்றார்.
அல் ஃபைஸ் நூர்-இ-சுலைமானி-1 கப்பல் தாக்கப்பட்டபோது அமெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று அருகில் இருந்ததாக சுலைமான் பாய் குறிப்பிட்டார்.
படக்குறிப்பு,அல் ஃபைஸ் நூர்-இ-சுலைமானி-1 கப்பலின் உரிமையாளரான சுலைமான்பாய் பையா, அந்தக் கப்பலைக் கட்டுவதற்காகத் தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்ததாகக் கூறுகிறார்.
“தாக்குதலுக்குப் பிறகு எனது கப்பலின் கேப்டனுடன் இரண்டு முறை பேசினேன். தாக்குதல் நடந்த சமயத்தில் அமெரிக்கக் கடற்படையின் கப்பல் ஒன்று அருகில் இருந்தது. ஒருவேளை அந்தப் பகுதியிலிருந்து ஒரு கப்பலைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக அந்தக் கடற்படைக் கப்பல் அங்கு இருந்திருக்கலாம்.”
“அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே நடந்து வரும் போருக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் எங்கள் ஆட்களை வேலை செய்யவே அனுப்புகிறோம், சண்டையிட அல்ல. நாங்கள் குற்றமற்றவர்கள். எனவே, இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டையில் எங்கள் கப்பல் சிக்கிக்கொண்டது என்றுதான் சொல்ல முடியும். எங்கள் கப்பலை எந்த நாடு தாக்கியது என்று எங்களால் சொல்ல முடியாது, ஆனால் ஒன்று மட்டும் உறுதி. தாக்குதல் எங்கள் கப்பலின் இரானியப் பக்கத்தில் நடக்கவில்லை, மாறாக ஓமானியப் பக்கத்தில்தான் நடந்தது”என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் அல் ஃபைஸ் நூர்-இ-சுலைமானி-1 கப்பலுக்கு அருகில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் இருந்தனவா என்பதை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இருப்பினும், அல் ஃபைஸ் நூர்-இ-சுலைமானி-1 கப்பலின் மாலுமி உயிரிழந்ததை துபையில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியதுடன், கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தது.
சமூக ஊடகத் தளமான எக்ஸ் தளத்தில் தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், மரத்தால் ஆன இந்தியக் கப்பல் ஒன்று கடலில் தீப்பற்றியது. இதில் ஒரு மாலுமி உயிரிழந்தார் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். அந்த வழியாகச் சென்ற மற்றொரு கப்பல் அவர்களை மீட்டது”என்று கூறப்பட்டுள்ளது.
“இந்தியத் தூதரக அதிகாரிகள் மீட்கப்பட்ட இந்தியர்களைச் சந்தித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துபையில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் கப்பல் உரிமையாளருடன் தொடர்பில் உள்ளதுடன் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது”
தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே ‘அல் ஃபைஸ் நூர்-இ-சுலைமானி-1’ கப்பல் மூழ்கிவிட்டதாக சுலைமான்பாய் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “ஒரு கப்பலில் ஓட்டை விழுந்தால், அது இரண்டு நாட்களுக்கு மூழ்காது. தீப்பிடித்தாலும் கூட, ஒரு நாள் வரை மிதக்கும். ஆனால் எங்களது கப்பல் ஒரு சக்திவாய்ந்த ஆயுதத்தால் தாக்கப்பட்டது. இதன் விளைவாக, எங்கள் கப்பல் சில நிமிடங்களிலேயே மூழ்கியது” என்றார்.
‘அல் ஃபைஸ் நூர்-இ-சுலைமானி-1’ கப்பலின் கேப்டன் (தாண்டல்) அமீன் சும்பானியா மற்றும் நான்கு மாலுமிகள் காயமடைந்ததாக கப்பல் உரிமையாளர் தெரிவித்தார்.
காயமடைந்த மாலுமிகளில் ஒருவரான 42 வயதான அல்தாஃப் கெர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
“கப்பல் சில நிமிடங்களில் மூழ்கும் நிலையில் இருந்ததால், எங்கள் மாலுமிகள் உடனடியாகக் கடலில் குதிக்க வேண்டியிருந்தது. எங்கள் கப்பலில் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிவிசி தண்ணீர் தொட்டி இருந்தது. மாலுமிகள் அதைப் பிடித்துக்கொண்டு மிதந்தனர். அல்தாஃப் பலத்த காயமடைந்திருந்ததால், கேப்டன் அவரை அந்தத் தொட்டியின் மீது வைத்திருந்தார்” என்று சுலைமான்பாய் கூறினார்.
“தாக்குதலுக்குப் பிறகு, தாண்டல் என்னைத் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்துத் தெரிவித்தார். நான் உடனடியாக இந்தியப் பாய்மரக் கப்பல்கள் சங்கத்தைத் தொடர்பு கொண்டேன். இறுதியில், சலாயாவைச் சேர்ந்த ‘பிரேம்சாகர்’ என்ற கப்பல் துபை நோக்கிச் சென்று கொண்டிருப்பதையும், அது எங்கள் கப்பலுக்கு அருகில் இருப்பதையும் அறிந்தோம். எனவே, அதன் உரிமையாளரையும் பின்னர் அதன் கேப்டனையும் தொடர்பு கொண்டு உதவி கேட்டோம். ஆனால் ‘பிரேம்சாகர்’ தேடி வந்து அல் ஃபைஸ் நூர்-இ-சுலைமானி-1 இருந்த இடத்தை அடைந்தபோது காலை 10 மணி ஆகிவிட்டது. அதற்குள் அல்தாஃப் இறந்துவிட்டார்”என்றார்.
அல்தாஃப் ஒரு மெக்கானிக்காகப் பணிபுரிந்ததாக சுலைமான்பாய் தெரிவித்தார்.
ஹோர்மூஸ் நீரிணை ஏன் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது?
இந்த குறுகிய பாதை பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கிறது. இதன் வடக்குக் கரையில் இரானும், தெற்குக் கரையில் ஓமனும் அமைந்துள்ளன.
இராக், குவைத், சௌதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் போன்ற வளைகுடா நாடுகள் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் முக்கிய ஏற்றுமதியாளர்களாக உள்ளன.
இந்த நாடுகள் முதன்மையாக பாரசீக வளைகுடாவில் உள்ள தங்களது துறைமுகங்கள் வழியாகவே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்கின்றன.
துபை துறைமுகமும் வணிகப் பொருட்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான ஒரு முக்கிய சர்வதேச மையமாகவும் விளங்குகிறது.
பாரசீக வளைகுடாவுக்குள் நுழைய அல்லது அங்கிருந்து வெளியேற, கப்பல்கள் மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை கடந்தாக வேண்டும்.
பாரசீக வளைகுடாவிலிருந்து வரும் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாக ஓமன் வளைகுடாவிற்குள் நுழைய முடியும். ஓமன் வளைகுடாவிலிருந்து கப்பல்கள் அரபிக்கடலுக்குள் நுழைய முடியும்.
அரபிக்கடலில் இருந்து கப்பல்கள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் துறைமுகங்களுக்கு பயணம் செய்ய முடியும்.
போர் தொடங்கியதில் இருந்து, இரான் ஹோர்மூஸ் நீரிணை வழியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் ஆதரவு நாடுகளின் கப்பல்கள் செல்வதற்குத் தடை விதித்துள்ளது.
இருப்பினும், இந்த நீரிணை பிற நாடுகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளதாக இரான் தொடர்ந்து கூறி வருகிறது.
இதற்கிடையில், போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகும் இரான் தனது கட்டுப்படுத்துவதாக தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கடல் பாதையில் இரானின் பிடியைத் தளர்த்தி, கப்பல் போக்குவரத்திற்காக அதைத் திறக்கும் முயற்சியாக இரானியத் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிடுவதாக அறிவித்திருந்தது.
அரபிக்கடலில் இரானியத் துறைமுகங்களை நோக்கிச் செல்லும் கப்பல்களையும், ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க இரானுக்குக் கட்டணம் செலுத்தும் எந்தவொரு கப்பலையும் நிறுத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கடந்த வாரம், ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களைப் பாதுகாக்கப் போர்க்கப்பல்களை அனுப்பும் ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ திட்டத்தை அமெரிக்கா அறிவித்தது.
இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதன் அமலாக்கத்தை சில மணிநேரங்களுக்கு நிறுத்தி வைத்தார்.
மே 8 ஆம் தேதி இரவு ‘பிரேம்சாகர்’ கப்பல், ‘அல் ஃபைஸ் நூர்-இ-சுலைமானி-1’ கப்பலின் மாலுமிகளை துபைக்கு அழைத்துச் சென்றதாக சுலைமான்பாய் தெரிவித்தார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், “காயமடைந்த நான்கு பேரும் சிகிச்சைக்காக துபையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அல்தாஃப் கெர்ரின் உடலும் அந்த மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “வெள்ளிக்கிழமை காலை கப்பல் உரிமையாளர் எங்கள் வீட்டிற்கு வந்து இச்சம்பவம் குறித்துத் தெரிவித்தார். ஒருவரது உடலை அரபு மண்ணில் அடக்கம் செய்யப்படுவதை நாங்கள் மிகவும் புண்ணியமாகக் கருதுகிறோம். எனவே, அல்தாஃப்பின் இறுதிச் சடங்குகளை துபையிலேயே செய்ய எங்கள் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
ஒருவேளை இங்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய முடிவு செய்தால், தற்போதைய சூழ்நிலையில் அவரது உடல் இங்கு வந்து சேர எட்டு முதல் பதினைந்து நாட்கள் வரை ஆகும். உடலைப் பராமரிப்பது கடினமாகிவிடும். அவரது முகத்தைக் கடைசி முறையாகப் பார்ப்பதும் சாத்தியமில்லாமல் போய்விடும்” என்றார்.
அல்தாஃப் கெர்ருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருப்பதாக கஃபார் பாய் தெரிவித்தார். சலாயாவில் உள்ள ஒரு மாலுமி குடும்பத்தில் பிறந்த அல்தாஃப், கடந்த இருபது ஆண்டுகளாக கப்பல்களில் பணியாற்றி வந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “அல்தாஃபின் மைத்துனர் துபையில் உள்ளார். அவர் அங்குள்ள மருத்துவமனையுடன் தொடர்பில் இருக்கிறார். இறுதிச் சடங்கு நடைபெறும் நாளில் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. இறப்புச் சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட நடைமுறைகள் இன்னும் நடந்து வருகின்றன” என்றார்.




