அனல் பறந்த முதல்வர் விஜயின் பேச்சு.. அதிர்ந்த பேரவை!

 

”எல்லோரும் போய்ட்டாங்க..” – அவைத் தலைவரிடம் கேள்வி எழுப்பிய விஜய்.. பேரவையில் எழுந்த சிரிப்பொலி!
முதல்வரின் உரையால் திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்திருந்த நிலையில், அப்போது அவைத் தலைவரிடம் முதல்வர் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், நேற்று சட்டசபையில் மீண்டும் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார்.

அதற்கு, பல்வேறு அமைச்சர்கள் பதிலளித்தனர். தொடர்ந்து இதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது திமுக குறித்து கடுமையாக விமர்சித்தார்.

குறிப்பாக, குட்டிக்கதை ஒன்றைச் சொல்லி முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினையும் கொளத்தூர் தொகுதியையும் விமர்சித்திருந்தார்.

குறிப்பாக, குட்டிக்கதை ஒன்றைச் சொன்னார். அவர், “ஒரு ஊர்ல ஒரு பெரியர் வெயில் ரொம்ப ஜாஸ்தியா இருக்குனு சொல்லிட்டு, கண்ணுக்கு மேல, இப்படி கைவைத்துக்கிட்டு சுத்திமுத்தியும் தேடிக்கிட்டு இருந்தாராம்.

அப்போ கூட இருந்த ஒரு சின்ன பையன், ’என்ன தேடுறீங்க’னு கேட்டானாம். அதுக்கு அந்தப் பெரியவர் சொன்னாராம். ’ஒண்ணுமில்ல தம்பி. உங்க அப்பா இங்கேதான் இருப்பாருனு சொன்னாங்க. அதான் தேடிக்கிட்டு இருக்கேன். எங்க, உங்க அப்பாவையே காணோம்..’” என்றவர், தொடர்ந்து “எங்களுக்கும் நக்கலாக, நையாண்டியாக சம்பமிந்தமில்லாத குட்டிக்கதை எல்லாம் எங்களுக்கும் பேசத் தெரியும். அந்தக் கதையில அந்தப் பெரியவர் அப்படிச் சொன்னாராம். தப்பா எடுத்துக்காதீங்க. அதனால இங்க யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்” என்றார்.

இதற்கிடையே முதல்வரின் உரையால் திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்திருந்தனர். அப்போது அவைத் தலைவரிடம் கேள்வி எழுப்பிய முதல்வர் விஜய், “எல்லோரும் போய்ட்டாங்க.. பேசலாமா” என்றார். அதற்கு அவைத் தலைவர், “நீங்கள் உங்கள் கருத்துகளை மனநிறைவோடு பேசலாம்” என்றார். அதைத் தொடர்ந்து

பேசிய அவர், “5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் இந்த ஆட்டம் ஆடியது. ’பேசு.. பேசுனா..’ அப்புறம் என்னா பண்றது” என்றதும், அவையில் சிரிப்பொலியுடன் மேஜை தட்டலும் எழுந்து அடங்கியது.