போலீஸ் காவலில் மரணமடைந்த ஆகாஷ்.. 110 நாட்கள் கழித்து உடல் தகனம்

 

சிவகங்கையில் போலீஸ் காவலில் மரணமடைந்த ஆகாஷ் உடல் மதுரை தத்தனேரி மயானத்தில் பலத்த பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் ஆகாஷ் டெலிசன், மார்ச் 6ம் தேதியன்று இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையின் போது தப்ப முயன்று காலில் முறிவு ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாளில் மார்ச் 8 அன்று உயிரிழந்தார்.

போலீஸ் காவலில் மரணமடைந்த ஆகாஷ்
இறப்பதற்கு முன் நீதிமன்ற நடுவரிடம் போலீசார் தன்னுடைய காலை உடைத்ததாக தெரிவித்திருந்தார். உடற்கூறாய்வில் அவரது உடலில் சுமார் 28 இடங்களில் காயங்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது பெற்றோர், உறவினர்கள், சமுதாய அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசார் தாக்கியதால் தான் ஆகாஷ் இறந்ததாகவும், இதில் தொடர்புடைய 16 போலீசார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்ச் 9ம் தேதி இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஆரம்பகட்டமாக 6 காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கிடையில், ஆகாஷ் மரணம் தொடர்பான விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
ஆகாஷ் உயிரிழப்பதற்கு முன் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, கொலை மற்றும் பட்டியலின, பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் 13ஆம் தேதி நீதிமன்றம் சிபிசிஐடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

101 நாட்களுக்கு பின்னர் உடல் தகனம்
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, மானாமதுரை டிஎஸ்பி ராஜா, திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை ஆய்வாளர் குமாரவேல் பாண்டியன், உதவி ஆய்வாளர் குகன், தலைமை காவலர் தெய்வேந்திரன், காவலர்கள் இருளப்பன், காளீஸ்வரன், மகேந்திரன், முத்துப்பாண்டி ஆகியோருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் தலைமை காவலர் முனீஸ் குமார் உள்ளிட்ட 11 பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

16 போலீசாரையும் கைது செய்தால் தான் போராட்டத்தை கை விட்டு உடலை பெற்றுக் கொள்வோம் என ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் கூறினர். மேலும், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமாரை, மே 3 அன்று சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறும் முறையிட்டிருந்தனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களாக ஆகாஷ் டெலிசனின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

110 நாட்கள் கழித்து சடலத்தை பார்த்து கதறிய தாய்
அதில், “50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்” என கேட்டிருந்தார். நேற்று முன்தினம் (ஜூன் 15) உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆகாஷ் உடலை அன்று மாலை 5:00 மணிக்குள் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் போலீசாரே உடலை அடக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். ஆனால் நேற்று வரை ஆகாஷ் உடலை பெறாமல் அவரது பெற்றோர், உறவினர்கள் மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

இதனால், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மருத்துவமனை முதல்வர் ஆகியோர் ஆகாஷின் உடலை பெற்று கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை ஆகாஷின் உடலை காவல்துறையினர் எடுத்து செல்ல வந்த போது குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனால், அவர்களை கைது செய்து போலீசார் வாகனத்தில் அழைத்து சென்ற பின்னர் உடலை தத்தனேரி மின் மயானத்திற்கு தகனம் செய்ய எடுத்து சென்றனர்.

அங்கு, குடும்பத்தினர் முன்னிலையில் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது, “ஆகாஷை கொன்றவர்களை கைது செய்வதற்கு துப்பில்லை. கேவலமான தமிழ்நாடு இது. என் மகனை கொன்றவர்கள் அனைவரும் அழிந்து போவார்கள். சாவுக்கு காரணமானவர்கள் நிச்சயம் அனுபவிப்பார்கள்” என கதறி அழுதபடி ஆகாஷின் தயார் மண்ணை வாரி காவல்துறையை நோக்கி தூற்றிவிட்டு சென்றார்.