பைக் திருடர்களை பிடித்து மின் கம்பத்தில் ஒட்டும் மர்ம நபர்!

 

மெக்சிகோவின் ஜாலிஸ்கோ (Jalisco) மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ (Lagos de Moreno) என்ற நகரில், ஹாலிவுட் திரைப்பட பாணியில் மர்ம நபர் ஒருவர் பைக் திருடர்களை வேட்டையாடி வரும் விசித்திரச் சம்பவம் உலகளவில் வைரலாகி வருகிறது. காமிக்ஸ் கதைகளில் வரும் ‘பேட்மேன்’ (Batman) கதாபாத்திரத்தைப் போல, இரவோடு இரவாக மோட்டார் சைக்கிள் திருடர்களைத் துரத்திப் பிடிக்கும் இந்த அடையாளம் தெரியாத நபர், அவர்களைப் பொதுவெளியில் உள்ள மின் கம்பங்களில் (Lampposts) பேக்கிங் டேப் கொண்டு பலமாக ஒட்டி வைத்துவிட்டுச் செல்கிறார். கடந்த பத்து நாட்களில் மட்டும் குறைந்தது 5 பைக் திருடர்களை இவர் இந்த முறையில் பிடித்துக் கட்டியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ‘மெக்சிகன் பேட்மேன்’ திருடர்களைக் கம்பத்தில் கட்டி வைப்பதோடு மட்டுமன்றி, அவர்களின் நெற்றியில் ஸ்பானிஷ் மொழியில் திருடன் எனப் பொருள்படும் ‘ரடெரோ’ (Ratero) அல்லது ‘ரடா’ (Rata) என்ற வார்த்தையை மார்க்கரால் எழுதி விடுகிறார். மேலும், அவர்களின் முகத்தில் பூனை மீசை போன்ற சித்திரங்களை வரைந்து, அவர்கள் திருடியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள்களையும் அவர்தம் அருகிலேயே நிறுத்தி விடுகிறார். சில இடங்களில், இவர்களது செயல்களை விவரிக்கும் பெரிய இளஞ்சிவப்பு நிற எச்சரிக்கை பதாகைகளையும் (Pink Signs) கம்பத்தின் மேல் இந்த மர்ம நபர் தொங்கவிட்டுச் செல்வது அவரது தனித்துவமான அடையாளமாக மாறியுள்ளது.

இந்தச் சம்பவங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி லட்சக்கணக்கான நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. உள்ளூர் காவல்துறையின் மெத்தனப் போக்கினாலும், அதிகரித்து வரும் குற்றங்களினாலும் விரக்தியடைந்த மக்கள் பலர், இந்த மர்ம நபரை ஒரு நிஜ உலக நாயகனாகக் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும், இந்த விவகாரத்தை மெக்சிகோ அதிகாரிகள் மிகவும் தீவிரமாகக் கருதுகின்றனர். சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தனிநபர் தண்டனை வழங்குவது (Vigilantism) அப்பட்டமான சட்டவிரோதம் என்றும், தற்போது கம்பத்தில் கட்டப்பட்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதால் அவர்கள் சட்டப்படி ‘பாதிக்கப்பட்டவர்களாகவே’ கருதப்படுவர் என்றும் ஜாலிஸ்கோ மாகாண அரசு வழக்கறிஞர் சல்வாதோர் கோன்சலஸ் தெரிவித்துள்ளார்.

காயங்களுடன் மீட்கப்பட்ட நபர்களுக்குத் தற்பொழுது மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதோடு, அவர்கள் மீதான திருட்டு வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், இந்த அதிரடி வேட்டையை நடத்துவது ஒரே ஒரு நபர் தானா அல்லது ஏதேனும் திட்டமிடப்பட்ட குழுவா என்ற கோணத்தில் மாநிலப் பாதுகாப்புச் செயலாளர் ஜுவான் பப்லோ ஹெர்னாண்டஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் திருடர்களுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கும் இந்த ‘லாகோஸ் டி மொரினோ பேட்மேனை’க் கைது செய்ய மெக்சிகோ போலீசார் தற்பொழுது வலைவீசித் தேடி வருகின்றனர்.