‘தி நிப்பான் பவுண்டேஷன்-நெக்டன் ஓஷன் சென்சஸ் சர்வதேச கடல் ஆராய்ச்சி அமைப்பு, கடந்த ஓராண்டில் மட்டும் 13 பிரம்மாண்ட கடல் பயணங்களை மேற்கொண்டு இந்த மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோரல் சீ (Coral Sea) கடல் பூங்கா முதல் ஜப்பானின் எரிமலைக் கடற்பகுதிகள் வரை சுமார் 6,575 மீட்டர் ஆழம் வரை சென்று இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. கடல்வாழ் உயிரினங்களை ஆவணப்படுத்தும் வேகத்தை 54 சதவீதம் வரை இந்தத் திட்டம் அதிகரித்துள்ளதுடன், இதுவரை அறிவியலுக்குத் தெரியாத பல விசித்திரமான உயிரினங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புகளில் உலக விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்திருப்பது ‘கைமேரா’ (Chimaera) என்று அழைக்கப்படும் புதிய வகை ‘பேய் சுறா’ ஆகும். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரைக்கு அப்பால், சுமார் 800 மீட்டர் ஆழத்தில் இந்த மர்ம உயிரினத்தை விஞ்ஞானி டாக்டர் வில்லியம் ஒயிட் கண்டறிந்துள்ளார். சுறா மற்றும் திருக்கை மீன்களின் தொலைதூர உறவினரான இந்த வகை மீன்கள், டைனோசர்கள் தோன்றுவதற்கு 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தனித்துவமான பரிணாம வளர்ச்சியைக் கொண்டு கடலில் வாழ்ந்து வருகின்றன. தற்போது இவற்றில் மூன்றில் ஒரு பங்கு இனம் அழியும் அபாயத்தில் உள்ளதால், இந்த புதிய கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பேய் சுறா மட்டுமின்றி, ஜப்பான் கடற்பகுதியில் ‘படிக அரண்மனை’ (Glass Castle) போன்ற கண்ணாடி கடற்பஞ்சுகளுக்குள் வாழும் விசித்திரமான புழுக்கள் மற்றும் திமோர்-லெஸ்தே பகுதியில் கண்டறியப்பட்ட பிரகாசமான வண்ணங்களைக் கொண்ட ‘ரிப்பன் புழுக்கள்’ (Ribbon Worms) ஆகியவை இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ரிப்பன் புழுக்களின் நச்சுக்கள், மனிதர்களின் ‘அல்சைமர்’ (Alzheimer’s) மற்றும் மனச்சிதைவு நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். கடலின் 90 சதவீத உயிரினங்கள் இன்னும் மனிதக் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கும் நிலையில், இந்தத் தரவுகள் கடல் சூழலியலைப் பாதுகாக்க உதவும் என ஓஷன் சென்சஸ் அறிவியல் தலைவர் டாக்டர் மிச்செல் டெய்லர் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றம், கடல் வெப்பநிலை உயர்வு மற்றும் மனிதர்களின் ஆழ்கடல் சுரங்க உத்திகளால் பல கடல் உயிரினங்கள் மனிதர்களால் கண்டறியப்படுவதற்கு முன்பே அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன. இதனைத் தடுக்கும் பந்தயத்தில், விஞ்ஞானிகள் புதிய ‘நோவா’ (NOVA) என்ற டிஜிட்டல் தளத்தின் மூலம் கண்டறியப்பட்ட உயிரினங்களின் தரவுகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து வருகின்றனர். இந்தத் புதிய கண்டுபிடிப்புகள் வெறும் விசித்திர உயிரினங்களின் பட்டியல் மட்டுமல்லாமல், பூமியின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான ஆதாரங்களாகவும் பார்க்கப்படுகின்றன.

