நாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலிப் பெண் கணக்குகள் பேஸ்புக் தளத்தில் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்த முதலாவது முறையான ஆய்வு அறிக்கையை சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ வெளியிட்டுள்ளார்.
இந்த ஆய்வின் மூலம், பயனர்களை ஏமாற்றி சூதாட்டம், முதியோருக்கான செட் , கிரிப்டோகரன்சி மற்றும் ஏனைய நிதி மோசடித் தளங்களை நோக்கி ஈர்ப்பதற்காக மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வலையமைப்பு செயல்பட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆய்வறிக்கையின் அதிர்ச்சியூட்டும் முக்கிய விபரங்கள்:
போலி அடையாளங்கள்: இந்த ஆய்விற்காக 10 குறிப்பிட்ட பேஸ்புக் கணக்குகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று கூட உண்மையான பெண்களுக்குச் சொந்தமானவை அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமை, விதவைக்கோலம், விவாகரத்து அல்லது கடுமையான பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது போன்ற உணர்ச்சிபூர்வமான பதிவுகளை பதிவிட்டு, அதன் மூலம் உண்மையான பயனர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கே இந்த ஏஐ அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த போலி வலையமைப்பினால் பதிவிடப்பட்ட 1,706 பதிவுகள் மூலம் 8,90,000 க்கும் அதிகமான ஈர்ப்புகள் பெறப்பட்டுள்ளன. சில நிமிட இடைவெளியில் ஒரே மாதிரியான தலைப்புகள் மற்றும் போஸ்ட்கள் பல கணக்குகளில் பகிரப்பட்டதன் மூலம் இது ஒரு திட்டமிட்ட கூட்டுச் செயல்பாடு என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கணக்குகளின் சுயவிபரம், சுருக்கப்பட்ட லிங்குகள் மற்றும் முதலாவது கமெண்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பேஸ்புக்கிற்கு வெளியேயுள்ள சந்தேகத்திற்குரிய இணையதளங்களுக்குப் பயனர்களை இந்த கணக்குகள் வழிகாட்டியுள்ளன.
தற்போதைய நிலையில் இந்த வலையமைப்பு அரசியல் செல்வாக்கைச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
எனினும், இந்த போலி கணக்குகள் ஏற்கனவே பொதுமக்களின் நம்பிக்கையையும் பெரும் வாசகர் வட்டத்தையும் பெற்றுள்ளதால், எதிர்காலத்தில் இதே உட்கட்டமைப்பை அரசியல் அல்லது பிற தவறான பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக கலாநிதி சஞ்சன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகைய போலி வலையமைப்புகள் ஸ்பானிஷ், இத்தாலியன் மற்றும் மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் கண்டறியப்பட்டுள்ளதால், இலங்கையில் இயங்கும் இந்தச் செயல்பாடு ஒரு சர்வதேச மோசடி மாதிரியின் ஒரு அங்கமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
சாதாரண பேஸ்புக் பயனர்களால் இந்த ஏஐ கணக்குகளையும் உண்மையான கணக்குகளையும் வேறுபடுத்திப் பார்ப்பது தற்போதைய சூழலில் மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளதாக இந்த ஆய்வின் முடிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



