இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள குருகுல பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி, கோடை விடுமுறையையொட்டி தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்தார்.
கடந்த 6-ந் திகதி மாலை, பாட்டியின் பணிப்பெண் பணிபுரியும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சிறுமி சென்றுள்ளார்.
அப்போது அதே கட்டிடத்தின் 2-வது மாடியில் வசித்து வந்த ஓட்டுநர் முகமது கவுஸ் பாஷா (45) என்பவர், சிறுமியை 4-வது மாடியில் உள்ள காலியாக இருந்த வீட்டுக்குள் பலவந்தமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதற்கு சிறுமி கடும் எதிர்ப்பு தெரிவித்து தப்பிக்க முயன்று கூச்சலிட்ட நிலையில், சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க குற்றவாளி எனக் கூறப்படும் நபர் சிறுமியை 4-வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி மயங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில், முகமது கவுஸ் பாஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.




