பாகிஸ்தானில் தனியார் பயிற்சி நிலைய கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லாகூர் நகருக்கு அருகிலுள்ள Kahna புறநகரில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பலரும் சிக்கியிருந்தனர். மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 7 முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணையின் ஒரு பகுதியாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. “கட்டிடத்தின் கூரை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
சிறுவர்கள் படித்துக்கொண்டிருந்தபோதே கூரையின் ஓடுகள் பழுதுபார்க்கப்பட்டு வந்தன.
கூரையின் மீது அதிக எடை ஏற்றப்பட்டதால் அது திடீரென இடிந்து பல சிறுவர்கள் மீது விழுந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளுக்கு அடியில் மேலும் சில குழந்தைகள் சிக்கியிருக்கக்கூடும் என்ற தகவல்கள் கிடைத்ததை அடுத்து, மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் தேடி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஃபைசல் கம்ரான் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் ஒரு பழைமையான கட்டிடத்தில் அமைந்திருப்பதாகவும், கட்டுமானத்தின் தரம் குறைவாக இருந்ததன் காரணமாகவே கட்டி முடிக்கப்படாத இரண்டாவது மாடியின் கூரை இடிந்து விழுந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
கட்டிடத்தில் தொழிலாளர்கள் ஓடுகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது, கூரை இடிந்து விழுந்து சிறுவர்களை நசுக்கியதாக நேரில் பார்த்த ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.



