அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 13-வது திருத்தத்தை நிராகரித்ததற்கும், இன்றையச் சூழலில் சில தமிழ்க் கட்சிகள் அதனை நிராகரிப்பதற்கும் இடையே ஒரு பிரம்மாண்டமான வேறுபாடு நிலவுகிறது. பிரபாகரன் தரை, கடல், வான் என முப்படைகளையும் கொண்ட வலுவான இராணுவ பலத்தைக் கொண்டிருந்தார்.
சர்வதேசமே வியந்து பார்த்த பேரம்பேசும் ஆற்றல் அவரிடம் இருந்தது. எனவே……
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்பது பல தசாப்தங்களாக, பெரும் தியாகங்களுக்கும் இழப்புகளுக்கும் மத்தியில் தொடரும் ஒரு நீண்டகாலப் போராட்டமாகும்.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு ஒன்றரை தசாப்தங்கள் கடந்துவிட்ட நிலையிலும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளன.
தற்போதைய அரசியல் சூழலில், அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ள 13-வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறோ அல்லது உடனடியாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறோ தமிழ்க் கட்சிகள் ஏன் ஒருமித்த குரலில் வலியுறுத்துவதில்லை என்ற பலத்த கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதற்கு பிரதான காரணமாக தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும் தனது சொந்தக் கட்சியின் பெயரிலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற ஒவ்வொரு தமிழ்க் கட்சியினதும் சுயநலப் போக்கும், தங்களின் தனிப்பட்ட மேலாதிக்க மனப்பான்மையுமே இதற்கு முதன்மையான தடையாக உள்ளது.
அனைத்து தமிழ்க் கட்சிகளும் கொள்கை அளவில் சமஷ;டி தத்துவத்தை ஆதரித்தாலும், தனிப்பட்ட போட்டி மற்றும் அரசியல் முதிர்ச்சியின்மையால் அவர்களால் ஒன்றிணைய முடியவில்லை. இந்த வரலாற்று ரீதியான ஒற்றுமையின்மையே இன்று தமிழர்களின் அரசியல் முன்னேற்றத்திற்குப் பெரும் சாபக்கேடாகவும் மாறியுள்ளது.
இலங்கைத் தமிழர் வரலாற்றில் மிக முக்கியமானதொரு திருப்புமுனையாக அமைந்தது 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கையெழுத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஆகும்.
அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆகியோருக்கு இடையில் கொழும்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தைக் கட்டுப்படுத்தவும், இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மைக்குள் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை உறுதி செய்யவும் இந்த ஒப்பந்தம் வழிவகுத்தது.
இதன் நேரடி விளைவாகவே, 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கை அரசியலமைப்பில் 14-வது மற்றும் 15-வது திருத்தங்களுடன் சேர்த்து 13-வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்த 13-வது திருத்தத்தின் மூலமே இலங்கையில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு, தமிழ் மொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட சில முக்கிய அதிகாரங்கள் மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று இந்தச் சட்டத்தில் கூறப்பட்டது.
எனினும், தொடக்கம் முதலே இந்தத் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. மத்திய அரசாங்கம் தனது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையைப் பயன்படுத்தி, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் படிப்படியாகப் பறித்துக் கொண்டது. குறிப்பாக, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் மாகாணங்களிடம் ஒப்படைக்கப்படவே இல்லை.
வடக்கு அரசியல் கட்சிகளின் பிளவுகள்
2009-ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர், வடக்கு மற்றும் கிழக்குத் தமிழ் அரசியல் சூழலில் ஒரு மிகப்பெரிய அதிகார வெற்றிடம் ஏற்பட்டது.
அதுவரை விடுதலைப் புலிகளின் அரசியல் முகமாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இராணுவப் பேரிழப்பிற்குப் பின்னர் மக்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக உருவெடுத்தது.
இராசவரோதயம் சம்பந்தன் தலைமையில் மிதவாதப் போக்கைக் கடைப்பிடித்த கூட்டமைப்பு, சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் தீர்வைப் பெற முயன்றது.
இருப்பினும், இந்த ஒற்றுமை நீண்ட காலம் நீடிக்கவில்லை. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் பல்வேறு பிரிவுகளாகவும், தராதரங்களாகவும் பிளவுபடத் தொடங்கின.
கூட்டமைப்பிற்குள் இருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) போன்ற கட்சிகள் தனித்தனியாகச் சிந்திக்கத் தொடங்கின.
2013 ஆம் ஆண்டில் வடக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், பின்னர் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கினார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) , கூட்டமைப்பின் மிதவாதப் போக்கை நிராகரித்து, சமரசமற்ற தீவிர தமிழ்த் தேசியக் கொள்கையையும் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13-வது திருத்தத்தை முற்றாகப் புறக்கணிக்கும் அரசியலையும் முன்னெடுத்தது.
அண்மைக் காலங்களில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனியாகச் செயற்படத் தொடங்கியதை அடுத்து, தசாப்த காலம் பலமாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்றிலும் சிதறிப்போனது.
இந்தத் தொடர்ச்சியான பிளவுகள், தமிழர்களின் கூட்டுப் பேரம்பேசும் சக்தியை முற்றிலுமாக சிதைத்துவிட்டது. அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாத ஒரு பலவீனமான நிலைக்கு வடகிழக்குத் தமிழ் அரசியல் இன்று தள்ளப்பட்டுள்ளது.
மறுபுறம் அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 13-வது திருத்தத்தை நிராகரித்ததற்கும், இன்றையச் சூழலில் சில தமிழ்க் கட்சிகள் அதனை நிராகரிப்பதற்கும் இடையே ஒரு பிரம்மாண்டமான வேறுபாடு நிலவுகிறது. பிரபாகரன் தரை, கடல், வான் என முப்படைகளையும் கொண்ட வலுவான இராணுவ பலத்தைக் கொண்டிருந்தார்.
சர்வதேசமே வியந்து பார்த்த பேரம்பேசும் ஆற்றல் அவரிடம் இருந்தது. எனவே, அவரால் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13-வது திருத்தத்தைத் தாண்டி, முழுமையான சுயநிர்ணய உரிமையையும் தன்னாட்சியையும் உறுதியாக வலியுறுத்த முடிந்தது. அன்றைய ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்ற தலைவர்கள் அவருக்கு மாகாண முதலமைச்சர் பதவியையோ அல்லது இடைக்கால நிர்வாக சபையையோ வழங்க முன்வந்தபோதும், அவர் அதனைத் தீர்க்கமாக நிராகரித்தார்.
ஆனால், இன்று தமிழ் மக்களிடம் ஆயுத பலமோ அல்லது சர்வதேசத்தை மிரட்டும் பேரம்பேசும் சக்தியோ இல்லை என்பதைச் சில கட்சிகள் இன்னும் உணர மறுக்கின்றன. பழைய உணர்ச்சிகரமான அரசியல் கோஷங்களை எழுப்புவது இன்றைய புவிசார் அரசியல் சூழலில் செல்லுபடியாகாது. நிலவும் யதார்த்தத்திற்கு ஏற்ப தந்திரோபாயமாகச் சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தென்னிலங்கையில் இன்று உள்ள சிங்களத் தலைவர்களில் பெரும்பாலானோர் 13-வது திருத்தத்தை அரசியலமைப்பிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அத்தகையதொரு தீவிர ஒற்றையாட்சிச் சூழலில், அதிகாரப் பகிர்வை அறவே விரும்பாத தென்னிலங்கை ஆட்சியாளர்களிடம் நேரடியாக சென்று சமஷ;டி பற்றிப் பேசுவது எந்தப் பயனும் தராது.
மாறாக, சிங்களக் கட்சிகள் தந்திரமாக ‘நாங்கள் கூட்டாட்சி அரசியலமைப்பைத் தருகிறோம்’ என்று கூறி, முதலில் இருக்கும் 13-வது திருத்தத்தை ஒழித்துவிட்டு, இறுதியில் தமிழர்களுக்குக் கூட்டாட்சியும் இல்லாமல், 13-வது திருத்தமும் இல்லாமல் பூச்சிய நிலைக்குத் தள்ளிவிடும் பேராபத்து உள்ளதை தமிழ் தலைமைகள் உணர வேண்டும்.
தந்திரோபாய நகர்வுகளின் அவசியம்
சர்வதேசத்திற்கும், மனித உரிமைகள் பேரவைகளுக்கும் சென்று தீர்மானம் நிறைவேற்றுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், அதுவரை வடகிழக்கில் வாழும் சாதாரண மக்களின் அன்றாட நிலை என்ன? அங்கு திட்டமிட்ட சிங்கள மற்றும் பௌத்த மயமாக்கல் ஊடுருவல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாகத் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பறிக்கப்படுகின்றன.
நிலம் மற்றும் சூழலின் மீதான தமிழர்களின் பிடி நழுவிச் செல்கிறது. வளங்கள் நம் கண் முன்னேயே சுரண்டப்படுகின்றன.
இங்கு மலையகத் தமிழர்களின் அரசியல் நகர்வுகளை உற்றுநோக்க வேண்டும். அவர்கள் தங்களின் தொழிற்சங்க பலத்தையும், பாராளுமன்ற ஆசனங்களையும் தந்திரோபாயமாகப் பயன்படுத்தி, சுதந்திரக் காலத்திலிருந்து படிப்படியாகத் தங்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் அதிகரித்து வந்துள்ளனர். ஆனால், வடக்கு-கிழக்கு தமிழர்களிடம் இன்று அத்தகைய நடைமுறைச் சாத்தியமான பலம் ஏதும் இல்லை.
எனவே, தமிழ்க் கட்சிகள் தங்களின் குறுகிய அரசியல் இலாபங்களைத் துறந்துவிட்டு, தந்திரோபாயங்களை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.
அதாவது கட்சிகள் தங்களின் தலைமையைப் பாதுகாப்பதை விடுத்து, மக்களின் காணி அபகரிப்பு, பொருளாதாரச் சீரழிவு போன்ற அன்றாடப் பிரச்சினைகளுக்காக ஒன்றிணைய வேண்டும்.
சமஷ;டி என்பது இறுதி மற்றும் நிரந்தரத் தீர்வாக இருந்தாலும், தற்போதைக்குக் கையில் இருக்கும் 13-வது திருத்தத்தின் கீழ் மாகாண சபையை ஏற்றுக்கொண்டு, அதனைப் படிப்படியாக வலுப்படுத்த வேண்டும்.
13-வது திருத்தம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் சர்வதேசக் கடப்பாடாகும். அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து ஒருமித்த குரலில் மாகாண சபைத் தேர்தலை வலியுறுத்தினால், இந்தியாவும் இலங்கைக்குக் காத்திரமான அழுத்தங்களைக் கொடுக்க முடியும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதன் மூலமே, தமிழ் மக்களின் கைகளில் ஓரளவுக்கேனும் அதிகாரங்களை வழங்கி, உடனடி நிவாரணத்தை உறுதிப்படுத்த முடியும். தமிழ்த் தலைவர்கள் தங்களின் குறுகிய கால சுயநலன்களைத் துறந்து, மக்களின் எதிர்காலத்திற்காகத் தீர்க்கதரிசனத்துடன் சிந்திக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இதுவேயாகும்.




