சிறுநீரில் ரத்தம் வந்தால் 7 முக்கிய காரணங்கள் !

 

சிறுநீரில் ரத்தம் ஏன் வருகிறது? சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரக கற்கள், புரோஸ்டேட் வீக்கம் உள்ளிட்ட 7 முக்கிய காரணங்கள் மற்றும் ஆரம்பக்கட்ட சிகிச்சையின் முக்கியத்துவத்தை சிறுநீரகவியல் துறை நிபுணர் விளக்குகிறார்.

சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, மருத்துவ ரீதியாக Haematuria என்று அழைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றினாலும், உடலின் ஏதோவொரு தீவிரமான பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். இதனை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது.

இதுகுறித்து சிறுநீரக நிபுணர் Dr. ஷஷாங்க் எம். எஸ் கூறியதாவது, “சிறுநீரில் ரத்தம் கலப்பதை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று, நம் கண்களுக்கே நேரடியாக தெரிவது (சிறுநீர் இளஞ்சிவப்பு, சிவப்பு அல்லது கோலா நிறத்தில் மாறும்). மற்றொன்று, கண்களுக்கு தெரியாமல் சிறுநீர் பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும்” என்றார்.
சிறுநீரில் ரத்தம் வருவதற்கான 7 காரணங்கள்
சிறுநீரில் ரத்தம் வருவதற்கு மருத்துவர் கீழே குறிப்பிட்டுள்ள ஆரோக்கிய குறைபாடுகள் காரணங்களாக இருக்கலாம்.

சிறுநீர் பாதை தொற்று பாக்டீரியா தொற்றுகள் காரணமாக சிறுநீர் பாதையில் ஏற்படும் பாதிப்பு
சிறுநீரக கற்கள் சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பையில் தோன்றும் கற்கள் நகரும் போது காயங்களை ஏற்படுத்தி ரத்த கசிவு உண்டாக்கலாம்
சிறுநீரக தொற்று சிறுநீரகத்தில் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் மற்றும் வீக்கம்
புரோஸ்டேட் வீக்கம் ஆண்களுக்கு வயது முதிர்வின் காரணமாக புரோஸ்டேட் சுரப்பி பெரிதாகும்போது இந்த பிரச்சனை ஏற்படலாம்
கடுமையான உடற்பயிற்சி சில நேரங்களில் மிக கடுமையான அல்லது தீவிரமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது தற்காலிக காரணமாக அமையலாம்.
மருந்துகளின் பக்கவிளைவு ரத்தத்தை மெலிக்கும் மருந்துகள் மற்றும் சில குறிப்பிட்ட மாத்திரைகளின் பயன்பாடு
புற்றுநோய் பாதிப்புகள் சில நேரங்களில் சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுநீர் பாதையில் ஏற்படும் புற்றுநோய்களின் ஆரம்ப அறிகுறியாகவும் சிறுநீரில் ரத்தம் இருக்கலாம். குறிப்பாக வயதானவர்கள், புகைப்பிடிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்
வேறு என்ன அறிகுறிகள் ஏற்படலாம்?
சிலருக்கு சிறுநீரில் ரத்தத்துடன் சேர்ந்து கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளும் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் எச்சரிக்கிறார்.

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அல்லது வலி
அடிவயிறு அல்லது கீழ் முதுகு பகுதியில் வலி
காய்ச்சல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு.
சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுதல்.
குறிப்பு: எந்தவொரு வலியும் இல்லாமல் சிறுநீரில் ரத்தம் வந்தாலும் கூட, அது ஆபத்தானதாக இருக்கலாம். எனவே, வலி இல்லை என்பதற்காக பரிசோதனையை தள்ளிப் போடக்கூடாது.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?
மருத்துவர் ஷஷாங்க் கூறியதாவது, “சிறுநீரில் ரத்தம் கலந்து வருவதை பார்த்த முதல்முறையே மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். சிறுநீர் பரிசோதனை, ரத்த பரிசோதனை, அல்ட்ராசவுண்ட், சிடி ஸ்கேன் அல்லது சிஸ்டோஸ்கோபி மூலம் காரணத்தை கண்டறிந்து மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்” என்றார்.

ஆரம்பக்கட்டத்திலேயே நோயை கண்டறிந்து சிகிச்சை பெறுவது தொற்று குணப்படுத்தவும், சிறுநீரக கற்களை அகற்றவும், சிறுநீரக நோய்களை தடுக்கவும் உதவும். தீவிரமான பாதிப்பாக இருந்தாலும், ஆரம்பத்திலேயே கண்டறிதல் முழுமையாக குணமடைய உதவும்.

சிறுநீரில் ரத்தம் தெரிந்தால் தானாக மருந்து வாங்கி சிகிச்சை எடுக்காமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.