நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு சிறை காவலர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். குறித்த அதிகாரிகளின் மரணங்களோடு மோதல் சம்பவத்தில் பதிவாகிய உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 31 ஆக உயர்வடைந்துள்ளது.
25 மற்றும் 39 வயதுடைய சிறை காவலர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்ததுடன், மற்றைய உத்தியோகத்தர் நேற்றைய தினம் அதிகாலை உயிரிழந்துள்ளார். இவர்கள் அம்பலாந்தோட்டை மற்றும் லுணுகம்வெஹேர ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த இரு அதிகாரிகளின் மரணத்தோடு, மோதலில் உயிரிழந்த சிறை காவலர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த அதிகாரிகளில் சிறைச்சாலை பொலிஸ் விசேடபுலனாய்வுபிரிவின் அதிகாரியான பி.டி. சந்திக லஷான் குணவர்தனவின் 7 வயதுடைய மகன் இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுவனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு பெருந்தொகை பணம் தேவைப்படுவதாக அவரது மனைவி இதற்கு முன்னர் ஊடகங்களிடம் மிகவும் உருக்கமாகத் தெரிவித்திருந்தார்.
கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட இந்த மோதலில் ஏற்கனவே 21 கைதிகள் உயிரிழந்ததிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இம்மோதலில் காயமடைந்த மேலும் ஒரு சில சிறை காவலர்களும், கைதிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



