யால சரணாலயத்தில் 5 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கைது

 

யால தேசிய சரணாலயத்தினுள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களை மீறி, சஃபாரி வாகனங்களிலிருந்து இறங்கி நடந்து சென்ற ஐந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யால தேசிய சரணாலயத்தின் ‘சுது வெலிமுல்ல’ பகுதியில் சஃபாரி சுற்றுலாவிற்காக இரண்டு ஜீப் வாகனங்களில் சென்ற குழுவினரே இவ்வாறு வனவிலங்கு பாதுகாப்பு சரணாலயத்தின் விதிமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது வாகனங்களை விட்டு கீழே இறங்கி, சரணாலயப் பகுதிக்குள் ஆபத்தான முறையில் நடந்து சென்றுள்ளனர்.

இதன்போது, அங்கிருந்த வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை எச்சரித்த போது, அக்குழுவினர் அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையிலும் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, வனவிலங்கு சட்டங்களை மீறியமை மற்றும் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த ஐந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, யால தேசிய சரணாலயத்தினுள் ஜீப் வாகன சாரதிகளோ அல்லது வேறு நபர்களோ சட்டங்களை மீறிச் செயற்பட்டால், அவர்களைக் கைது செய்வதற்கும், சம்பந்தப்பட்ட ஜீப் வாகனங்களுக்கு சஃபாரி சேவைகளில் ஈடுபட தடை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என யால ஜீப் வாகன சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், தற்போதைய சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் வாகனங்களுக்கு எதிராக இதுவரை உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அந்த வாகனங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை எனவும் அச்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது