நீர்கொழும்பு சிறை மோதல்: சிறை அதிகாரிக்கு சுரேஷின் கொலை மிரட்டலே காரணம், மோதல் குறித்து CID விளக்கம்

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல், தமக்கு உடற்பயிற்சி செய்வதற்கு போதிய நேரம் இல்லை எனக் கூறி கட்டுவெல்லேகம சுரேஷ் எனும் கைதி, சிறைச்சாலை அதிகாரி ஒருவரை கொலை செய்ய மிரட்டி குழப்பமாக நடந்துகொண்டதன் காரணமாகவே ஆரம்பமானதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீர்கொழும்பு நீதவான் சிலனி பெரேரா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (14) நீதிமன்றில் விடயங்களை சமர்ப்பித்தது.

இந்த மோதல் கடந்த 05 மற்றும் 06 ஆகிய திகதிகளில் இடம்பெற்றதுடன், இதில் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 136 சிறைச்சாலை அதிகாரிகள், 141 கைதிகள் மற்றும் 09 விசேட அதிரடிப்படை அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றிற்கு அறிவித்தது.

இந்த சம்பவத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 89 பொலிஸ் அதிகாரிகள் கொழும்பிலிருந்து நீர்கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர் என்பதையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.