அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கத்தாரில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானுக்கு சொந்தமான 6 பில்லியன் டாலர் (ரூ.56,000 கோடி) சொத்துக்கள் திருப்பி ஒப்படைக்கப்படும் என ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியன் அறிவித்துள்ளார். அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தத்திற்கான இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி, அடுத்த 60 நாட்களில் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் கத்தார் அரசுக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், ஈரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பக்ரைன், குவைத் நாடுகளில் ஈரான் ஏவுகணைகளை ஏவியது.
இதனால், இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் சவாலாகி உள்ள நிலையில், ஈரான் அதிபர் பெசேஷ்கியன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அவர், ‘‘கத்தாரில் ஈரானுக்கு சொந்தமான 12 பில்லியன் டாலர் நிதி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இடைக்கால ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 6 பில்லியன் டாலர் நிதி விடுவிக்கப்பட்டு, ஈரானிடம் திருப்பி ஒப்படைக்கப்பட உள்ளது.
இது ஈரான் மக்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி. மீதமுள்ள சொத்துக்களையும் மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’’ என கூறியதாக அரசுக்கு சொந்தமான ஐஆர்என்ஏ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், தற்போது வரை அமெரிக்கா, கத்தார் அதிகாரிகள் தரப்பில் இந்த நிதி இன்னும் அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. எனவே, ஈரான் அதிபரின் அறிவிப்பு, இடைக்கால ஒப்பந்தம் குறித்து ஈரான் மக்களிடையே ஆதரவை உருவாக்கும் முயற்சியாகவே கருதப்படுகிறது.
* கத்தாரில் இன்று பேச்சுவார்த்தை?
கத்தாரின் தோகாவில் இன்று ஈரானுடன் சந்திப்பு நடைபெறும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடக பதிவில் கூறி உள்ளார். இருதரப்பை மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தானும், சமீபத்திய மோதல்களால் எதுவும் மாறவில்லை என்றும், திட்டமிட்டபடி இன்று பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என தெரிவித்துள்ளது. ஆனால் ஈரான் தரப்பில் இது மறுக்கப்பட்டுள்ளது. ஈரானின் மூத்த பேச்சுவார்த்தையாளர் காசெம் கரிபாபாடி அளித்த பேட்டியில், ‘‘தோகாவில் கத்தாருடன் ஆலோசனை நடைபெறும் என்றாலும், அமெரிக்கா உள்ளிட்ட தரப்பினருடன் தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை’’ என்றார்.



