இலங்கை சிறையில் வன்முறை 19 கைதிகள் உட்பட 26 பேர் பலி: 100க்கும் மேற்பட்டோர் காயம்

 

இலங்கையின் மேற்கு கடற்கரை நகரமான நீர்கொழும்புவில் உள்ள சிறைச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பெண்கள் உள்பட 1000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளில் சிலர் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், சிலர் அதற்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இவ்விரு குழுக்களை சேர்ந்த கைதிகள் திடீரென பயங்கர மோதலில் ஈடுபட்டனர். அப்போது நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்படும் வரை தற்காலிகமாக காவலில் வைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளும், தற்போது தண்டனையை அனுபவித்து வரும் கைதிகளும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 2 கைதிகள் உயிரிழந்தனர். அப்போது சிலர் காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியதுடன், அவர்களிடமிருந்த துப்பாக்கிகளையும் கைப்பற்றினர்.

இந்த சூழலில் 2ம் நாளாக நேற்றும் பயங்கர வன்முறை வெடித்தது. கலவரம் குறித்த செய்திகள் வௌியாகி கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அங்கே திரண்டதால் மேலும் பதற்றம் இந்த சூழலில் சிறை கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களில் 19 பேர் கைதிகள், 7 பேர் சிறை அதிகாரிகள். 100க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சில கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.