கடந்த 2025-ஆம் ஆண்டில் உலக அளவில் பயங்கரவாதத்தின் தாக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்கள், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை என அனைத்துமே பெருமளவில் சரிந்துள்ளன. ‘ உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு 2026 ’ அறிக்கையின்படி, 2025-இல் மொத்தம் 81 நாடுகள் தங்களது பாதுகாப்புச் சூழலில் முன்னேற்றம் கண்டுள்ளன. இக்குறியீட்டின் வரலாற்றிலேயே, ஒரே ஆண்டில் இத்தனை நாடுகள் முன்னேறியிருப்பது இது இரண்டாவது முறையாகும்.
பயங்கரவாதத்தால் உலகிலேயே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முதல் நாடுகள் பட்டியலும், அவற்றின் ஜிடிஐ (GTI) புள்ளிகளும் இதோ:
1. பாகிஸ்தான் (புள்ளிகள்: 8.574)
ஆப்கானிஸ்தான் எல்லையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறைகள் காரணமாக, இப்பட்டியலில் பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதன்முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. ‘தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான்’ (TTP) போன்ற அமைப்புகளால், அங்கு 1,000-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன; கடத்தல் சம்பவங்களும் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளன. இதனால் கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்கள் முற்றிலும் நிலைைகுலைந்து போயுள்ளன.
2. புர்கினா பாசோ (புள்ளிகள்: 8.324)
கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த புர்கினா பாசோ, தற்போது இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இங்கு பயங்கரவாத உயிரிழப்புகள் 45 சதவீதம் குறைந்துள்ளன. இருப்பினும், உள்ளூர் ஜிஹாதிக் குழுக்கள் குறைவான தாக்குதல்களை நடத்தினாலும், அவை பொதுமக்கள் மீது மிகக் கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்துவதால், நாட்டின் சூழல் இன்னும் பதற்றமாகவே நீடிக்கிறது.
3. நைஜர் (புள்ளிகள்: 7.816)
சாஹேல் (Sahel) பிராந்தியத்தின் எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ள நைஜர் நாடு, தீவிரவாதக் குழுக்களின் தொடர் ஊடுருவல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒடுக்க உள்ளூர் அளவில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அங்கு தீவிரவாத அமைப்புகள் இன்னும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருவதால், உலக அளவில் பயங்கரவாதத்தின் முக்கிய மையமாக இந்த நாடு தொடர்கிறது.
4. நைஜீரியா (புள்ளிகள்: 7.792)
நைஜீரியாவில் பயங்கரவாதத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் 46 சதவீதம் என்ற அளவில் அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்துள்ளன. இதற்கு ‘இஸ்லாமிக் ஸ்டேட் மேற்கு ஆப்பிரிக்க மாகாணம்’ (ISWAP) மற்றும் ‘போகோ ஹராம்’ ஆகிய அமைப்புகளே முக்கியக் காரணம். லேக் சாட் (Lake Chad) பகுதியில் இந்த அமைப்புகள் தங்களது கொடூரத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதால், பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் தரப்பில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
5. மாலி (புள்ளிகள்: 7.586)
சாஹேல் பிராந்தியத்தில் நிலவி வரும் ஆழமான அரசியல் மற்றும் பாதுகாப்புச் சீர்குலைவுகளால், மாலி நாடு தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகிறது. பலவீனமான ஆட்சி நிர்வாகம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு இல்லாத நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் தீவிரவாதக் குழுக்கள், ராணுவத்தினர் மற்றும் கிராமப்புற மக்கள் மீது கொடூரத் தாக்குதல்களை நடத்திப் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
6. சிரியா (புள்ளிகள்: 7.545)
உலகிலேயே ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ (IS) அமைப்பின் தாக்குதல்கள் மிக அதிக அளவில் அரங்கேறிய நாடாகச் சிரியா பதிவாகியுள்ளது. பிராந்தியக் கட்டுப்பாடுகள் சிதறிக் கிடப்பது, சர்வதேச நாடுகளின் மறைமுகப் போர்கள் மற்றும் சிறைகளில் இருந்து தீவிரவாதிகள் பெருமளவில் தப்பியோடியது போன்ற காரணங்களால் சிரியாவின் பாதுகாப்புச் சூழல் இன்னமும் மிகவும் பலவீனமாகவே உள்ளது.
7. சோமாலியா (புள்ளிகள்: 7.391)
சோமாலியாவில் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தபோதிலும், அங்கு ‘அல்-ஷபாப்’ (Al-Shabaab) அமைப்பின் அச்சுறுத்தல் முதன்மையாக நீடிக்கிறது. அந்நாட்டு மத்திய அரசை வீழ்த்துவதற்காக, அரசு உள்கட்டமைப்புகள் மற்றும் சர்வதேச அமைதிப் படைப் பிரிவுகளைக் குறிவைத்து இந்த அமைப்பு தொடர்ந்து தற்கொலைப்படைத் தாக்குதல்களையும், பதுங்கியிருந்து தாக்கும் உத்திகளையும் கையாண்டு வருகிறது.



