கொங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவல்: 65 பேர் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு இட்டூரி மாகாணத்தில் எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆபிரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரை 246 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவர்களில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, தங்கம் அகழ்வு செய்யப்படும் நகரங்களான மொங்வாலுமற்றும் ரம்பாரா ஆகிய பகுதிகளிலேயே அதிகளவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தலைநகர் கின்ஷாசாவிலுள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பகுப்பாய்வு செய்யப்பட்ட 20 மாதிரிகளில் 13 பேருக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எபோலா பரவலைத் தடுப்பதற்கும், எல்லை தாண்டிய கண்காணிப்புகளை பலப்படுத்துவதற்கும் கொங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த ஆபிரிக்க சிடிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
1976ஆம் ஆண்டு முதன்முதலில் கொங்கோவிலேயே இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. வௌவால்கள் மூலம் இது பரவுவதாக நம்பப்படுகிறது.
காய்ச்சல், தசை வலி, சோர்வு, தலைவலி மற்றும் தொண்டை புண் போன்றவை ஆரம்ப கால அறிகுறிகளாகும். இது உடல் திரவங்கள் மூலம் பரவக்கூடியதுடன், கடுமையான உட்புற இரத்தப்போக்கு மற்றும் உடல் உறுப்பு செயலிழப்பை ஏற்படுத்தும்.
எபோலா வைரஸிற்கு தற்போது நேரடி மருந்து எதுவும் இல்லை.
இட்டூரி மாகாணம் தற்போது இராணுவ ஆட்சியின் கீழ் உள்ளது. அங்கு நிலவும் ஆயுதக் குழுக்களின் மோதல்களினால் சுகாதாரப் பணியாளர்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கொங்கோவில் இதற்கு முன்னதாக 2018-2020 காலப்பகுதியில் ஏற்பட்ட எபோலா பரவலின் போது சுமார் 2,300 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது ஏற்பட்டுள்ளது அந்நாட்டின் 17ஆவது எபோலா பரவலாகும்.