இத்தாலிய பெண்கள் பின்பற்றும் Slow Beauty தலைமுடி பராமரிப்பு முறை என்றால் என்ன? வலுவான, நீளமான, பளபளப்பான முடிக்கு உதவும் 6 எளிய ஹேர் வாஷ் டிப்ஸை தெரிந்துகொள்ளுங்கள்.
இத்தாலியர்கள் அழகின் ரகசியமே அவசரமில்லாமல் வாழ்க்கையை ரசித்து வாழும் ‘la dolce vita’ தத்துவம் தான். இந்த நிதானமான அணுகுமுறை அவர்களின் ஃபேஷன், சருமம் மட்டுமின்றி கூந்தல் பராமரிப்பிலும் பிரதிபலிக்கிறது.
வைரல் ட்ரெண்டுகளை பின்தொடராமல், உச்சந்தலை ஆரோக்கியம் மற்றும் முடியின் இயற்கையான எண்ணெய்ப் பசையைப் பாதுகாக்கும் ‘Slow Beauty’ முறையையே நம்புகிறார்கள் இதனால் இத்தாலிய பெண்களின் கூந்தல் காலப்போக்கில் இயற்கையாகவே வலுவாகவும், நீளமாகவும், பளபளப்பாகவும் மாறுகிறது.
தினமும் தலைமுடியை வாஷ் செய்வது கிடையாது
இத்தாலியர்கள் தினமும் தலைமுடி அலசுவதற்கு பதிலாக, வாரத்திற்கு 2 அல்லது 3 முறை மட்டுமே தலைமுடியை கழுவுகிறார்கள். இது முடியின் இயற்கையான எண்ணெயை பாதுகாக்கவும், முடி வறண்டு போகாமல் தடுக்கவும், அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தவும்,முடியின் வேர்க்கால்கள் சேதமடையாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
ஷாம்பூ போடுவதற்கு முன் உச்சந்தலை மசாஜ் செய்யவும்
தலைமுடியில் ஷாம்பு பயன்படுத்துவதற்கு முன்பு, சில நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் உச்சந்தலையை மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இச்செயல் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், உச்சந்தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை தளர்த்தும், ஷாம்பூ கூந்தலை இன்னும் திறம்பட சுத்தம் செய்ய உதவும் மற்றும் மனதிற்கு நிம்மதியான உணர்வை தரக்கூடும்.
ஷாம்பூவை உச்சந்தலையில் மட்டுமே பயன்படுத்தவும்
ஷாம்பூவின் முக்கிய பணி உச்சந்தலையை சுத்தம் செய்வதுதான். ஷாம்பூவை தேய்த்து கழுவும்போது, ஷாம்பூ நுரை தானாகவே முடி நீளத்திற்கு சென்று, முடியின் நுனிகளில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சாமல் அழுக்குகளை மட்டும் நீக்கிவிடும்.இது முடியின் நுனிகள் வறண்டு போவதை தடுப்பதோடு முடி உடைவதைக் குறைக்கிறது. மேலும், உச்சந்தலையைச் சுத்தமாக வைத்திருக்க உதவும்
கண்டிஷனரை உச்சந்தலையில் தடவ மாட்டார்கள்
கண்டிஷனரை ஒருபோதும் உச்சந்தலையில் நேரடியாக பயன்படுத்தக் கூடாது. நடுப்பகுதியிலிருந்து முடி நுனி வரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இது உச்சந்தலை பிசுபிசுப்பாக மாறுவதை தடுப்பதோடு கூந்தலின் இயற்கையான அடர்த்தியையும் பொலிவையும் தக்கவைக்கிறது. மேலும், முடி சிக்குவது மற்றும் நுனிமுடி பிளவு ஏற்படுவதை குறைக்கிறது
வெதுவெதுப்பான நீரில் அலசி, குளிர்ந்த நீரில் முடிக்கவும்
அதிக வெப்பமான நீர் உச்சந்தலையின் இயற்கையான எண்ணெய்களை உறிஞ்சி, அதை வறட்சியாக்கிவிடும். எனவே கூந்தலை சுத்தம் செய்ய வெதுவெதுப்பான நீரை பயன்படுத்த வேண்டும். இறுதியாக, முடியை மென்மையாக்க குளிர்ந்த நீரை கொண்டு அலச வேண்டும். இதனால் கூந்தல் பளபளப்பாக தெரிவதோடு முடி சிக்குதல் குறையக்கூடும். கூந்தலை மிகவும் மென்மையாக காட்டும்.
கூந்தலை இயற்கையான காற்றில் உலர விடுங்கள்
அடிக்கடி ஹேர் டிரையர் பயன்படுத்துவதற்கு பதிலாக, இத்தாலியர்கள் தங்கள் கூந்தலை இயற்கையான காற்றிலேயே உலர வைக்கிறார்கள். இது வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதோடு முடி உடைவதை தடுக்க செய்கிறது. நீண்ட காலத்திற்கு கூந்தலை வலுவாக வைத்திருக்கும்.
ஆராய்ச்சி என்ன சொல்கிறது?
ஆய்வின்படி, அதிகப்படியாக ஷாம்பூ பயன்படுத்துவது உச்சந்தலையில் வறட்சி, கியூட்டிகிள் சேதம் மற்றும் கூந்தல் பலவீனமடைவதற்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் அடிக்கடி தலைமுடி அலசுவதை தவிர்ப்பது கூந்தலுக்கு மிகவும் நல்லது.
இந்த முறை அனைவருக்கும் செட் ஆகுமா?
கண்டிப்பாக இல்லை. கூந்தலை எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை அலச வேண்டும் என்பது தலைமுடி வகை, உச்சந்தலையின் எண்ணெய் சுரக்கும் தன்மை, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி பழக்கங்கள் மற்றும் காலநிலை பொறுத்து மாறுபடும்.
உதாரணமாக, எண்ணெய் பசையுள்ள உச்சந்தலை கொண்டவர்கள் அடிக்கடி தலைமுடி அலச வேண்டியிருக்கலாம். வறண்ட அல்லது சுருட்டை முடி கொண்டவர்களுக்குக் குறைந்த முறை அலசுவதே நல்லது.தினமும் தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்கள் கூந்தலை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியிருக்கும்.



