ஆஸ்திரேலியா செல்லும் மாணவர்களுக்கு விசா கட்டணம் மீண்டும் உயர்வு – எவ்வளவு தெரியுமா?

 

ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர் விசா கட்டணத்தை ஆஸ்திரேலிய அரசு AUD 710-இலிருந்து AUD 1,600 ஆக உயர்த்தியுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.46,000-இலிருந்து ரூ.1.05 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு சர்வதேச மாணவர்கள் மற்றும் கல்வித் துறை அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாற்றத்தால், உலகிலேயே அதிக மாணவர் விசா கட்டணம் வசூலிக்கும் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. கனடா, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளை விட ஆஸ்திரேலியாவின் மாணவர் விசா கட்டணம் தற்போது அதிகமாக உள்ளது.இதனுடன், ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே தற்காலிக பட்டதாரி , சுற்றுலா அல்லது கடல்சார் பணியாளர் விசாவில் உள்ளவர்கள், நாட்டிற்குள்ளேயே இருந்து மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது என்ற புதிய விதியும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி அவர்கள் வெளிநாட்டிலிருந்து மட்டுமே மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், தற்காலிக பட்டதாரி விசா (Subclass 485) பெறுவதற்கான வயது வரம்பும் 50-இலிருந்து 35 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.இதற்கு முன்பாகவே, 2025 மார்ச் மாதத்தில் தற்காலிக பட்டதாரி விசா கட்டணம் AUD 2,300-இலிருந்து AUD 4,600 ஆக இரட்டிப்பாக்கப்பட்டது. எந்த முன்னறிவிப்பும் இன்றி எடுக்கப்பட்ட இந்த முடிவு மாணவர்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.

இந்த விசா மூலம் தான் படிப்பை முடித்த சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்கி வேலை செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு பெறுவதிலும் சர்வதேச மாணவர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 55 சதவீத சர்வதேச மாணவர்கள் வேலை கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பல நிறுவனங்கள் நிரந்தர குடியுரிமை (Permanent Residency) பெற்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்குவதால், வெளிநாட்டு மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்த சூழலில், விசா கட்டணங்களை தொடர்ந்து உயர்த்துவது ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு இந்த புதிய விதிமுறைகள் மற்றும் கட்டண உயர்வுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கல்வி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.