குறுக்கு வழியில் செல்ல சீன பெருஞ்சுவரை உடைத்த தொழிலாளர்கள்ஸ
08 Sep,2023
அன்னியர்களின் படையெடுப்பில் இருந்து சீனாவை பாதுகாப்பதற்காக வடக்கு சீனா பகுதியில் பிரமாண்ட சுவர் கட்டமைக்கப்பட்டது. இந்த சுவர் கரடுமுரடான மலைகள், பாலைவனங்கள் மற்றும் சமவெளிகள் வழியாக ஒரு டிராகனின் முதுகெலும்பைப் போல வடக்கு சீனாவின் பரந்த பரப்பளவில் நீண்டு காணப்படுகிறது. அன்னிய படைகளுக்கு எதிரான பாதுகாப்பு மட்டுமல்லாமல், சீனாவின் வளமான வரலாறு மற்றும் நீடித்த நாகரிகத்தின் அடையாளமாகவும் செயல்படுகிறது.
இங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலை பயன்படுத்தி 38 வயது ஆண் மற்றும் 55 வயது பெண் ஆகியோர் குறுக்கு வழியை ஏற்படுத்தியுள்ளனர். இந்த சுவரை சுற்றி செல்வதற்கு நீண்ட தூரம் ஆவதால் முறையாக அமைக்கப்பட்ட நுழைவு வாயிலை தவிர்த்து விட்டு குறுக்கு வழிக்காக அவர்கள் இப்படி பாதையை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி இச்சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். இருப்பினும், பழம்பெருமை மிக்க சீன பெருஞ்சுவர் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அதிசயமான பெருஞ்சுவர் சேதப்படுத்தப்பட்ட நிகழ்வை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டதால் சீனாவின் இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 1368 முதல் 1644 வரை ஆட்சியில் இருந்த மிங் வம்சத்தால் ஏற்படுத்தப்பட்ட 32 ஆவது சுவரில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சீன பெருஞ்சுவரின் மற்ற பகுதிகளில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து சீன அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.