இளம் வயது திருமணத்திற்கு ஊக்கத்தொகை.. சீனா!
05 Sep,2023
சீனாவில் பிறப்பு விகிதம் என்பது சற்று குறைந்து வரும் நிலையில், இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தற்போது பெண்களுக்கு ஊக்கதொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மக்கள் தொகையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக முதலிடத்தில் நீடித்து வந்த சீனாவில் முதல் முறையாக கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் குறைந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக சீனாவில் ஒரு குடும்பம், ஒரு குழந்தை என்ற திட்டம் 46 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு அந்த திட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது சீனாவில் ஒரு குடும்பத்திற்கு மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அதே சமயம் மாகாண அரசுகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் தம்பதியர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தின் சாங்ஷான் என்னும் பகுதியில் அரசு நிர்வாகம் தற்போது குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதியதொரு முயற்சியை மேற்கொண்டுள்ளது. இளம் வயது திருமணங்கள் அதிகரித்தால் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வார்கள் என்ற அடிப்படையில் புதிய திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மணமகளுக்கு 25 வயது அல்லது அதற்கு குறைவான வயது இருந்தால் அந்த தம்பதியருக்கு ஆயிரம் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.11,500) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முதல்முறை திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் என்பது 1.09ஆக இருந்தது. 100 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ஒரு நாட்டுடன் ஒப்பிடும்போது இந்த பிறப்பு விகிதம் சற்று குறைவாகும். சீனாவில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள அதிகாரப்பூர்வ வயது 22 ஆகும். பெண்களுக்கான திருமண வயது 20 ஆகும். இருப்பினும் இளம் வயதில் திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது. அதே சமயம் ஒற்றை பெற்றோராக இருந்து பெண்கள் மட்டும் குழந்தைகளை வளர்த்துக் கொள்வது தொடர்பான கொள்கைகளை அரசு கடுமையாக்கியதால் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கடுமையான விலைவாசி உயர்வு, கல்வி மற்றும் சுகாதார செலவுகள் மிகுதியாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைகளை வளர்த்தெடுக்க அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சத்தில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள சீனாவில் தம்பதியர் முன்வருவதில்லை. இளம் வயதிலுள்ள பலர் திருமணம் செய்து கொள்வதை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகின்றனர். நீண்ட நெடிய பணி நேரம், குறைவான ஊதியம் போன்ற காரணங்களால் இளம் வயதினர் இல்லற வாழ்க்கையை கண்டு அஞ்சி திருமணம் செய்து கொள்வதை ஒத்திவைத்து வருகின்றனர்.