ரீட்வீட் செய்தவருக்கு மரண தண்டனை... சவுதி அரேபியா அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
02 Sep,2023
சவுதியில் பட்டத்து இளவரசருக்கு எதிராக ரீட்வீட் செய்தவருக்கு மரண தண்டனைசவுதியில் பட்டத்து இளவரசருக்கு எதிராக ரீட்வீட் செய்தவருக்கு மரண தண்டனை
உலகிலேயே அதிக அளவில் மரண தண்டனை வழங்கும் நாடுகளில் சீனா, ஈரானுக்கு அடுத்துபடியாக சவுதி அரேபியா அரசு உள்ளது. சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக கருத்துக் கூறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பலருக்கும் நீண்டகால சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் சவுதி அரசுக்கு எதிராக X-தளத்தில் கருத்துகளை பதிவிட்ட ஒருவருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்துள்ளது.
சவுதி அரேபியாவில் முகமது நாசர் அல்-காம்டி என்பவர் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் சவுதி அரசுக்கு எதிரான பதிவுகளை தொடர்ந்து ரீட்வீட் செய்து வந்துள்ளார். அத்துடன் யூடியூபில் சவுதி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாசர் அல்-காம்டி மெக்கா நகரில் வசித்து வரும் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர் மதத்திற்கு எதிராக செயல்பட்டதாகவும், சமூகத்தின் பாதுகாப்பை சீர்குலைத்துவிட்டதாகவும், சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்ததாகவும், பட்டத்து இளவரசர் மீது அவதூறாக குற்றம்சாட்டியதாகவும் சவுதி சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி, முகமது நாசர் அல்-காம்டிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனித உரிமை ஆர்வலர்கள கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒருவர் ரீ ட்வீட் செய்ததற்கெல்லாம் மரண தண்டனையா என கேள்வி எழுப்பியுள்ளார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். ட்வீட்களுக்காக அல்-காம்டி என்பவருக்கு மரண தண்டனை வழங்கி இருப்பது மிகவும் கொடூரமானது. சவூதியில் அதிகரித்து வரும் ஒடுக்குமுறைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் லினா அல்ஹத்லூல் சவுதி அரசை விமர்சித்துள்ளார்.
முன்னதாக டாக்டர் பட்டம் பெற்ற மாணவி சல்மா அல்-ஷெஹாப் என்பவருக்கு சவுதி அரேபிய அரசுக்கு எதிராக பேசியதற்காக 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மாணவி தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருவதற்கே கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்போது ஒரு ட்விட்டர் பதிவை மறு பதிவு செய்ததற்கு மரண தண்டனை என்பது சவுதியில் உள்ள அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக செயல்படுவோர் மற்றும் அரசுக்கு எதிராக செயல்படுவோரை ஒடுக்க இதுபோன்ற தண்டனைகள் முன்னெடுத்து வருகிறது அந்நாட்டு அரசு. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முஹம்மது பின் நாசர் அல்-காம்டியின் சகோதரர் சயீத் பின் நாசர் அல்-காம்டி சவுதி அரசை கடுமையாக சாடியிருக்கிறார். இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இங்கிலாந்தில் இருந்த படி சவுதி அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இது தவறான தீர்ப்பு என்றும், தன்னை சவுதி அரேபியாவிற்கு திரும்பி வரவழைப்தற்கான முயற்சிகள் தோற்றுப் போனதால் இப்படி செய்திருக்கிறார்கள் என்றும் சயீத் பின் நாசர் அல்-காம்டி காட்டமாக கூறியுள்ளார்.
தன் கருத்தை தெரிவிப்பதற்கெல்லாம் மரண தண்டனை விதிப்பதன் மூலம் அடக்குமுறையின் உச்சத்தில் சவுதி அரேபிய அரசு இருப்பது வெளிப்பட்டுள்ளது என்று விமர்சித்துள்ளார் மனித உரிமை ஆராய்ச்சியாளர் ஜோய் ஷியா.