பிரிக்ஸ் மாநாட்டை நடத்தும் தென்னாப்பிரிக்கா, நெல்சன் மண்டேலாவின் படத்துடன் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆகஸ்ட் 22ம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசவுள்ளனர். இச்சந்திப்பின் போது, பிரிக்ஸ் அமைப்பில் புதிய உறுப்பு நாடுகளைச் சேர்த்துக் கொள்வதா என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியின் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ'நீல், கடந்த 2001-ல் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பெயர்களை உள்ளடக்கிய "பிஆர்ஐசி"(BRIC) என்ற சுருக்கத்தை உருவாக்கினார்.
அந்த நேரத்தில் நடுத்தர வருவாயைக் கொண்ட, அதே நேரம் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்த நாடுகள் தான் அவை. இந்த நாடுகள் வரும் 2050ம் ஆண்டு உலகிலேயே அதிக பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடுகளாக மாறும் என்று அவர் கணித்தார்.
2006ம் ஆண்டு இந்த நான்கு நாடுகளும் இணைந்து 'பிரிக்' நாடுகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கின. அதில் 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவும் இணைந்து 'பிரிக்ஸ்' கூட்டமைப்பு என்ற பெயரை இந்த அமைப்பு பெற்றது.
பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து, 324 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. அவர்களுடைய ஒட்டுமொத்த தேசிய வருவாய் 26 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது உலக பொருளாதாரத்தில் 26 சதவிகிதம் ஆகும்.
இருப்பினும், அமெரிக்காவைச் சேர்ந்த அட்லாண்டிக் கவுன்சிலின் கருத்தின்படி, பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் இணைந்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நாணய நிதியத்தில் 15 சதவிகித வாக்களிப்பு உரிமையை மட்டுமே கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களை சீரமைக்கும் நோக்குடன் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
நியூ டெவலப்மென்டல் பேங்க் (New Development Bank ) என்ற பெயரில் 250 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பு சார்பில் ஒரு வங்கி கடந்த 2014ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, பிரிக்ஸ் நாடுகளின் அவசரத் தேவைக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்த வங்கியில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இல்லாத எகிப்தும், ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்துகொண்டன.
பிரேசிலில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் ரஷ்ய தலைவர்கள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்புக்காக தனிப்பட்ட நாணயத்தை உருவாக்க முடிவெடுத்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் இந்நாடுகள் முயற்சிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன. சர்வதேச நிதி, பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகளில் டாலரின் செல்வாக்கு குறையும் போது உலக அரசியலில் அமெரிக்காவின் ஆதிக்கமும் குறைந்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
இருப்பினும், தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மாநாட்டில் இது பற்றிய விவாதம் இடம்பெறாது என ஆசியா மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கான அந்நாட்டின் தூதர் அனில் சூக்லல் தெரிவித்துள்ளார்.
ஆனால், இது போல் பிரிக்ஸ் நாடுகளுக்கான பொது நாணயத்தை அறிமுகப்படுத்துவது கேலிக்குரியது என 'பிரிக்' என்ற கோட்பாட்டை உருவாக்கிய கோல்டுமேன் சாக்ஸ் வங்கியின் ஜிம் ஓ'நீல் இங்கிலாந்தின் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பதால் சீனாவுடன் பிரேசில் நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபடமுடியும்.
ஒவ்வொரு பிரிக்ஸ் நாடும் ஒரு மிகப்பெரிய நாடாகவே கருதப்படுகிறது என்கிறார் டப்ளினில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியைச் சேர்ந்த பட்ரைக் கார்மோடி.
"இருப்பினும் அதில் மிகப்பெரிய நாடாக சீனா விளங்குகிறது," என்கிறார் அவர். "இதன் மூலம் பிரிக்ஸ் கூட்டமைப்பு உலகில் சக்திவாய்ந்த குரலாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது என்பது மட்டுமல்ல, உலக அளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கருதுகிறது."
ஆனால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா, சீனாவின் போட்டி நாடாக விளங்குகிறது. சீனாவுடன் மிக நீண்ட எல்லையை இந்தியா பகிர்ந்து கொண்டிருக்கையில் இருதரப்புக்கும் இடையே நீண்ட கால பிரச்னைகள் இருக்கின்றன.
மேற்குலக நாடுகளுடனான உறவுகளைப் பேணும் விஷயத்திலும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே பல முரண்கள் நிலவுகின்றன.
"பிரிக்ஸ் கூட்டமைப்பை மேற்குலக நாடுகளுக்கு எதிரான நிலையில் பயன்படுத்த ரஷ்யா முயல்கிறது. அதன் மூலம் யுக்ரேன் நாட்டின் மீது போர் தொடுத்ததற்காக அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை உடைத்தெறிய முயன்றுவருகிறது," என்கிறார் சாத்தம் ஹவுஸ் என்ற லண்டனைச் சேர்ந்த பொருளாதார அமைப்பின் இயக்குனர் க்ரியோன் பட்லர்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ரஷ்யா தற்போது எண்ணெய் ஏற்றுமதி செய்துவருகிறது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு மேற்குலக நாடுகள் தடை விதித்ததால், இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவின் மிகப் பெரிய வாடிக்கையாளர்களாக மாறியுள்ளன.
இருப்பினும், பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகள், ரஷ்யாவின் இந்தப் போக்கை ஆதரிக்கவில்லை.
"தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உலக நாடுகளுக்குள் பாகுபாடு ஏற்படுவதை விரும்பவில்லை," என்கிறார் பட்லர். "மேற்குலகை எதிர்ப்பது அந்த நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக இருக்கும் என அவை கருதுகின்றன."
பிரிக்ஸ் மற்றும் ஆசியாவுக்கான தென்னாப்பிரிக்க தூதர் அனில் சூக்லல் அண்மையில் தெரிவித்த தகவலின் படி, 22 நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், மேலும் 20க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இதில், ஈரான், அர்ஜெண்டினா, கியூபா, கஜகஸ்தான், எதியோப்பியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வெனிசூலா நாடுகளும் அடங்கும்.
"உலகின் அதிகாரத்தை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்த்துவதாகவே இந்நாடுகள் கருதுகின்றன. இதன் மூலம் பிரிக்ஸ் கூட்டமைப்பின் வலிமை அதிகரிக்கும் என்றும் கருதுகின்றன," என்கிறார் பேராசிரியர் கார்மோடி.
"ஆனால், பிரிக்ஸ் கூட்டமைப்பு குறிப்பிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஒரு குழுவாக இருக்கிறது," என்கிறார் அவர். மேலும், "புதிய உறுப்பினர்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உண்மையான நோக்கமும், பலமும் நீர்த்துப் போகும் வாய்ப்பு உள்ளது," என்றும் அவர் கூறுகிறார்.
"என்னுடைய கருத்து என்னவென்றால், சில நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு சேர்த்துக்கொள்ளலாம்," என்கிறார் பட்லர், "ஆனால் அவை, ஈரான் போன்ற பிரச்னைகளில் தத்தளிக்கும் நாடாக இல்லாமல், அர்ஜெண்டினா போன்ற நாடுகளாக இருக்கும்."
2023 பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜொகன்னஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் யாரெல்லாம் சேரலாம் என்பது குறித்த விதிகளை வகுப்பது முக்கிய விவாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பருவநிலை மாற்றம், வர்த்தக விரிவாக்கம், முதலீட்டுக்கான வாய்ப்புகள், வளரும் நாடுகளை நவீனப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படலாம்.
இம்மாநாட்டில் பங்கேற்க ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் கரீபிய பிராந்தியங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தென்னாப்பிரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார். போர்க்குற்றங்கள் காரணமாக அவரைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒரு பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில், அவர் தென்னப்பிரிக்காவுக்குப் பயணம் செய்ய மாட்டார் என தெரியவந்துள்ளது. மேலும், தன்மீதான போர்க் குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தும் நாடுகளில் ஒன்றாக தென்னாப்பிரிக்கா உள்ள நிலையில், அவர் அங்கு சென்றால் அது அரசியல் ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.
இதனால், ரஷ்யாவில் இருந்துகொண்டே இணையம் மூலம் இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதாக புதின் அறிவித்துள்ளார் என ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கீ லாவ்ரோவ் கூறியுள்ளார்.