வெளிநாட்டு மோசடி கும்பலிடமிருந்து ரூ.6,100 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்ஸ
18 Aug,2023
வெளிநாட்டு மோசடி கும்பலிடம் இருந்து ரூ. 6,100 கோடி மதிப்பிலான சொத்துக்களை சிங்கப்பூர் போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர். சிங்கப்பூரில் சமீப காலத்தில் நடந்த மிகப்பெரும் சோதனை நடவடிக்கையாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. செல்வ வளம் கொழிக்கும் சிங்கப்பூர் நாட்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் வர்த்தகம், வேலை பார்த்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் வெளிநாடுகளை சேர்ந்த கும்பல் மோசடி செய்து சொத்துக்களை குவித்திருப்பதாக சிங்கப்பூர் போலீசாருக்கு புகார்கள் வரத் தொடங்கின. இதையடுத்து நேற்று முன்தினம் 400க்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டார்கள். அங்குள்ள ஆர்ச்சர்ட் ரோடு முதல், செண்டோசா ரிசார்ட் தீவு வரையில் முக்கிய குடியிருப்புகளில் அதிரடி சோதனை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.
இதன் முடிவில் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6100 மதிப்புள்ள சொசுகு பங்களாக்கள், கார்கள், விலை உயர்ந்த வாட்ச்சுகள், ஆபரணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மோசடியில் ஈடுபட்டதாக 31 முதல் 44 வயதுக்கு உட்பட்ட வெளிநாட்டினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சீனா, கம்போடியா, சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள்.
சோதனையின் போது தப்பியோடிய சிலரை தேடும் நடவடிக்கையில் சிங்கப்பூர் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை சிங்கப்பூரில் மோசடி செய்யும் வெளிநாட்டு கும்பல் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துகள் பறிமுதல் குறித்து சிங்கப்பூர் போலீசார் கூறுகையில், ‘மோசடி கும்பலிடம் இருந்து சொத்துக்களை மீட்டு வருகிறோம். இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும்’ என்று தெரிவித்தனர். இதேபோன்று மோசடியில் ஈடுபடும் நிதி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கையை சிங்கப்பூர் போலீசார் மேற்கொள்வார்கள் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.