விடாது துரத்தும் ஆகஸ்ட்.. அஞ்சி நடுங்கும் ரஷியர்கள்..
12 Aug,2023
இரு தரப்பிலும் டிரோன்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது 2023 ஆகஸ்டில் சிறிய மற்றும் பெரிய தாக்குதல்கள் உக்ரைனால் தினமும் நடைபெறுகிறது மேலும் படிக்க ரஷியாவில் பல தசாப்தங்களாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தை ரஷியர்கள் ஒரு வித அச்சத்துடன் பார்த்து வருகின்றனர். "ஆகஸ்ட் சாபம்"
என அவர்கள் பெயரிட்டு அழைக்கும் இந்த மாதத்தில் தான், அதிக எண்ணிக்கையில் ஆபத்தான விபத்துகள், தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் போர் தொடக்கம் ஆகியவை நடைபெற்று பலத்த உயிர்சேதங்களும்,
கட்டிட சேதங்களும் நடக்கின்றன என அவர்கள் நம்புகிறார்கள். கடந்த சில வருடங்களாக அந்நாட்டு மக்கள் இதனை சற்று மறந்திருந்தார்கள். ஆனால் நடைபெற்று வரும் ரஷிய-உக்ரைன் போர் இந்த அச்சத்தை மீண்டும் தட்டி எழுப்பியிருக்கிறது. கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் போரிட்டு வருகிறது. இரு தரப்பிலும் பெரும் உயிர்சேதமும்,
கட்டிட சேதங்களும் நடைபெற்று வருகிறது. போர் 530 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இப்போரில் இரு தரப்பிலும் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆகஸ்ட் மாதம், ரஷியாவின் மீதான உக்ரைன் தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது. கருங்கடல் பகுதியில் ரஷிய ராணுவ
மற்றும் சரக்கு கப்பல்கள் மீது உக்ரைன்
'கப்பல் டிரோன்கள்' மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் சிறியளவிலேயே பல டிரோன் தாக்குதல்களை தினந்தோறும் நடத்தி உக்ரைன் அதிரடி காட்டி வருகிறது. இவை ரஷியாவில் உள்ள அலுவலக கட்டிடங்கள், ராணுவ தளங்கள், வர்த்தக இடங்கள் மற்றும் பொதுமக்களின் வசிப்பிடங்களை குறி வைத்து நிகழ்த்தப்படுகிறது. இவற்றில் பல வீழ்த்தப்பட்டாலும், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனிலிருந்து ரஷியாவின்
பல இடங்களை நோக்கி ஏவப்பட்ட 20 ஆளில்லா விமானங்களை ரஷியா இடைமறித்து வீழ்த்தியதாக தெரிவித்தது. இத்தாக்குதல்களில் உயிர்சேதம் ஏதுமில்லை. இந்த 20 டிரோன்களில் மாஸ்கோவிற்கு தென்மேற்கே 150 கிலோமீட்டர் தொலைவில் கலுகா பகுதியில் ஒரு டிரோன் வீழ்த்தப்பட்டது. ரஷிய தலைநகர் மாஸ்கோவின் மேற்கு பகுதிக்கு குறிவைக்கப்பட்ட மற்றொரு டிரோன் இதே போல் வீழ்த்தப்பட்டுள்ளது. இவை மக்களிடையே மீண்டும் ஆகஸ்ட் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.