நாசாவிலும் கரண்ட் கட்! - அப்புறம் என்ன ஆச்சு?
28 Jul,2023
நாசாவில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டால், முதன் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்துடனான தொடர்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்து வரும் 7 வீரர்களுக்கு, நாசா ஆய்வகத்தில் இருந்து தகவல்கள் தொடர்ந்து பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் ஹுஸ்டான் நகரில் உள்ள நாசா ஆய்வகத்தில் திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், சுமார் ஒன்றரை மணிநேரம் சர்வதேச விண்வெளி நிலையத்துடனான தொடர்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. செய்வதறியாது சற்று தடுமாறிய விஞ்ஞானிகள், சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு, மின்வெட்டு ஏற்பட்ட தகவலை, ரஷ்யாவின் தகவல் தொடர்பு மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில்
உள்ள வீரர்களுக்கு தெரிவித்தனர். பின்னர், இயற்கை பேரிடர் சமயங்களின் போது பயன்படுத்துவதற்காக வைத்திருந்த கட்டடத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்பு கொள்ளப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் மின்வெட்டு குறித்த தகவல் தெரியாமல், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த வீரர்களும் சற்று குழப்பம் அடைந்தனர். ரஷ்யாவின் தொலைதொடர்பில் இருந்து தகவல்கள் பரிமாறப்பட்ட பிறகே, வீரர்கள் சற்று ஆசுவாசம் அடைந்தனர். சர்வதேச விண்வெளி நிலையத்துடன் தொடர்பில் உள்ள நாசாவையும், மின்வெட்டு சீண்டி பார்த்திருப்பது கவனிக்கத்தக்கது.