சிக்னலில் நிற்காமல் சென்றால் ரூ.11 லட்சம் அபராதம்ஸஜூலை 6 முதல் துபாயில் அமலுக்கு வந்தது
11 Jul,2023
துபாயில் சாலை விதிகளை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்க அந்நாட்டு அரசு அதிரடி திட்டமிட்டுள்ளது.
துபாயில் போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்டவற்றிற்காக விதிக்கப்படும் அபராதங்கள் மற்ற நாடுகளை விட அதிகமாக இருக்கும். போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க அதிக தொகையில் அபராதம் பெறப்படும் நாடுகளில் துபாயும் ஒன்று. இந்நிலையில் துபாயில் கடந்த ஜூலை 6ஆம் தேதி முதல் திருத்தப்பட்ட போக்குவரத்து விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, சிக்னலில் நிற்காமல் செல்வது மற்றும் ஆக்ரோஷமாக வாகனம் ஓட்டுவது மிகவும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த விதிமீறல்களில் ஈடுபடுவோர்க்கு விதிக்கப்படும் அபராதமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சாலையில் சிவப்பு சிக்னலுக்கு நிற்காமல் செல்வோர் 50,000 திர்கம் அபராதமாக செலுத்த வேண்டும். அதாவது இந்திய ரூபாயில் சுமார் ரூ.11 லட்சத்திற்கு மேல் அபராதம் செலுத்த வேண்டும். அதேபோல், பாதசாரிகள் நடந்து செல்லும் நடைபாதையில் வாகனம் ஓட்டினாலும் 50,000 திர்கம் அபராதம் விதிக்கப்படும்.
இன்னும் ஒரு படி மேலே, போலீஸாரின் அனுமதியின்றி பொது சாலையில் ரேஸ்களை மேற்கொண்டால் 1 லட்சம் திர்கம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 22 லட்சத்திற்கும் மேல் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ரூ.22 லட்சத்திற்கும் அதிகமான அபராதத்தை செலுத்துவது மட்டுமின்றி, இந்த விதிமீறலில் உட்படுத்தப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
வெளிநாட்டைச் சேர்ந்த ஓட்டுநர்கள் கனரக லாரியை சிவப்பு சிக்னலில் நிறுத்தாமல் சென்றால், அபராதத்தை செலுத்துவதுடன், உடனடியாக அவர் துபாயை விட்டு வெளியேற்றப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டினாலோ அல்லது அதிக ஒலி இரைச்சலை ஏற்படுத்தும் விதமாக வாகனத்தை சட்டத்திற்கு விரோதமாக மாடிஃபை செய்தாலோ அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
போலி வாகன பதிவெண்ணை பொருத்துவது, மற்றவர்களை பயமுறுத்தும் வகையில் ஆக்ரோஷமாக வாகனம் ஓட்டுவது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஜன்னல் கண்ணாடிகளை டிண்ட் செய்வது, அனுமதி பெறாமல் வாகனத்தின் முன்பக்க விண்ட்ஷீல்டை டிண்ட் செய்வது, போலீஸ் வாகனத்துடன் மோதி சேதமடைய செய்வது மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால் வாகனம் இயக்கப்படுவது உள்ளிட்ட குற்றங்களுக்கு 6,000 திர்கம் (ரூ.1.35 லட்சம்) அபராதம் விதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அபராதத்தை செலுத்தும் வரையில், இந்த போக்குவரத்து விதிமீறல்களில் உட்படுத்தப்பட்ட வாகனங்கள் போலீசார் வசம் இருக்கும் என்றும் மேலும் அபராதம் செலுத்தாமல், போலீஸாரிடம் இருந்து தப்பித்து செல்ல முயன்றால் அதற்கு கூடுதலாக ரூ.1.35 லட்சத்தை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. துபாய் நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான இந்த புதிய அபராதங்கள் கடந்த ஜூலை 6ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.