நாம் எல்லோருமே பள்ளிப் பருவத்தை கடந்து வந்தவர்கள் தான். இன்றைக்கு கூட நம் பிள்ளைகள் அல்லது பேரக் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நிலையில் இருப்பார்கள். ஆண்டில் 365 நாட்களும் பள்ளிகள் நடைபெறுவதில்லை.
வார விடுப்பு நாட்கள், அரசு விடுமுறைகள், பண்டிகை கால விடுமுறைகள், தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை என சுழற்சி முறையில் வந்து கொண்டே இருக்கும். தோராயமாக ஒரு ஆண்டுக்கு 240 நாட்கள் தான் வேலை நாட்களாக இருக்கும். எஞ்சிய நாட்களெல்லாம் விடுமுறை நாட்கள்தான்.
மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஏறக்குறைய ஆசிரியர்களுக்கும் இந்தச் சலுகை முழுமையாக பொருந்தும். இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளை எடுத்துக் கொண்டாலும் இதே விதிமுறை தான் கணக்கில் இருக்கிறது. பொது விடுமுறை நாட்களைக் கடந்து, தனி நபருக்கு உடல்நிலை சரியில்லை, நீண்ட மருத்துவ சிகிச்சை, வீட்டில் விசேஷம் என்று பல காரணங்களுக்காக விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இப்படி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் அதிக பட்சம் ஒரு நாள், 4 நாள் அல்லது ஒருவாரம், அதையும் தாண்டினால் 2 வாரம் அல்லது ஒரு மாதம்..? இந்த அளவுக்குத்தான் விடுப்பு எடுப்பார்கள்.
ஆனால், இத்தாலியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் கதையை கேட்டால் நமக்கே வியப்பாக இருக்கிறது. கடந்த 24 ஆண்டுகளில் மொத்தமாக 4 ஆண்டுகள் மட்டும்தான் பள்ளிக்கு வந்திருக்கிறாராம். எஞ்சியுள்ள 20 ஆண்டுகளை விடுப்பிலேயே கழித்திருக்கிறார். உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு, கருத்தரங்கு, மாநாட்டில் கலந்து கொள்ள விடுப்பு என புதுப்புது காரணங்களில் கணக்கு, வழக்கு இல்லாமல் லீவு எடுத்திருக்கிறார்.
இந்த ஆசிரியரின் பெயர் சின்சோ பூலியானா தி லியோ. மகளிருக்கான சிறப்பு உரிமைகளையும் இவர் பயன்படுத்தியிருக்கிறார். தற்போது இந்த ஆசிரியருக்கு 56 வயதாகிறது. இதில், 24 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், 20 ஆண்டுகள் விடுப்பிலேயே கழிந்திருக்கின்றன. வெனீஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.
எப்போதுமே மிக நீண்ட காலத்துக்கு சின்சோ பூலியானா விடுப்பு எடுப்பதால் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இவர் மீது எரிச்சலில் இருந்திருக்கின்றனர். சிலர் இப்படி ஒரு ஆசிரியர் இருப்பதையே மறந்து விடுவார்களாம்.
சமீபத்தில் ஒருமுறை பள்ளிக்கு வந்த இந்த ஆசிரியர் வாய்மொழியாக தேர்வு நடத்தியிருக்கிறார். அப்போதும் கூட ஃபோனில் மெசேஜ் செய்தபடியே இருந்துள்ளார். இத்தனைக்கும், தற்போதைய பாடத்திட்டம் என்னவென்றே தெரியாமல், சரியான புத்தகம் கூட இல்லாமல் இருந்திருக்கிறார். இதனால் கொதித்தெழுந்த மாணவர்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர்.
நாட்டின் மிக மோசமான ஊழியர் என்ற முத்திரையும் இவர் மீது விழுந்தது. சின்சோ பூலியானா நடத்திய பாடங்கள் அனைத்தும் மிகுந்த குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தன என்று பள்ளியின் ஆய்வுக் குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதனால் கடந்த ஜூன் 22ஆம் தேதி இறுதியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
முன்னதாக, தனக்கு எதிரான பணிநீக்க நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆசிரியர் முறையிட்டார். அவர் பணியில் தொடருவதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 24 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் பணிக்கு வரவே இல்லை என்பது தெரிய வந்ததும் நீதிமன்றம் இந்த மோசமான ஆசிரியரை பணிநீக்கம் செய்ய அதிரடியாக உத்தரவிட்டது.