ரஷ்யாவுக்கு எதிராக திரும்பிய வாக்னர் குழு... கிளர்ச்சியாளர்களைக் கண்டதும் சுட உத்தரவிட்ட புடின்
26 Jun,2023
உக்ரைன் மீதான போரின் போது, தங்களுக்கு ரஷ்ய ராணுவம் முழு ஒத்துழைப்பு தரவில்லை என்றும், தங்கள் முகாம்கள் மீது ரஷ்ய ராணுவம் ராக்கெட் தாக்குதல் நடத்தி பல்லாயிரக்கணக்கான வீரர்களை கொன்று குவித்ததாகவும் வாக்னர் படைத் தலைவர் தெரிவித்திருந்தார்.
ரஷ்யாவில் திடீரென கிளர்ச்சியாளர்களாக மாறிய வாக்னர் குழுவை கண்டதும் சுட ராணுவத்தினருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாக்னர் என்ற ஆயுதம் ஏந்திய தனியார் குழுவினர் லிபியா, சிரியா, மாலி உள்ளிட்ட நாடுகளில் விதிகளை மீறி இயங்கி வருகின்றனர். கடந்தாண்டு பிப்ரவரி முதல் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்த வாக்னர் குழுவையும் புடின் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
உக்ரைன் மீதான போரின் போது, தங்களுக்கு ரஷ்ய ராணுவம் முழு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் தங்கள் முகாம்கள் மீது ரஷ்ய ராணுவம் ராக்கெட் தாக்குதல் நடத்தி பல்லாயிரக்கணக்கான வீரர்களை கொன்று குவித்ததாகவும் வாக்னர் படைத் தலைவர் ப்ரிகோஸின் (Prigozhin) தெரிவித்திருந்தார். மேலும், தங்கள் மக்களைக் கொன்ற பிரச்சனைக்கு எதிரான போராட்டம் தற்போது தொடங்கியுள்ளதாகவும், மேலும் அதை விரைவுபடுத்தி தீர்க்கமானதாக மாற்ற இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரோஸ்டோவ் நகரில் திடீரென நுழைந்த வாக்னர் குழுவினர், ரஷ்ய ராணுவ தலைமை அலுவலகத்தை கைப்பற்ற முயற்சித்தனர். இதன் ஒரு பகுதியாக ரோஸ்டோவ் மற்றும் மாஸ்கோ நகரங்களில் வாக்னர் குழுவினரின் டாங்கி மற்றும் பீரங்கி வாகனங்கள் உலா வந்தன. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மாஸ்கோவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
வாக்னர் குழுவினர் திடீரென படையெடுத்த நிலையில் அது பற்றி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் வாக்னர் குழுவினர் முதுகில் குத்திவிட்டதாக புடின் கூறியுள்ளார்.
ஆயுதம் ஏந்தியுள்ள வாக்னர் குழு தேசத்துக்கு எதிரானவர்கள் என்று கூறிய புடின், உள்நாட்டு போரை அனுமதிக்க முடியாது என்றும் நாட்டை பாதுகாப்போம் என்றும் தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்ட புடின், ராணுவத்தினர் வாக்னர் குழுவை வீழ்த்த ஆணையிட்டுள்ளார்.