அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கி தென் கொரியா சென்றடைந்தது
16 Jun,2023
அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலொன்று, தென் கொரியரின் பூசான் நகரை இன்று சென்றடைந்தது.
வட கொரியாவின் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்கு அமெரிக்கா அளித்த வாக்குறுதியை செயற்படுத்தும் நடவடிக்கை இது என தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
யூஎஸ்எஸ் மிச்சிகன் எனும் இந்நீர்மூழ்கிக் கப்பலே பூசான் நகரை சென்றடைந்துள்ளது, அமெரிக்காவின் இத்தகைய நீர்மூழ்கியொன்று கடந்த 6 ஆண்டுகளில் முதல் தடவையாக தென் கொரியாவுக்கு சென்றுள்ளது.
வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான உறவுகள் அண்மைக்காலமாக மிகவும் சீர்குலைந்துள்ளன.
வட கொரியா மாற்றமுடியாத அணுவாயுத நாடு என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் கூறியதுடன், அணுவாயுதங்கள் உட்பட ஆயுதத் தயாரிப்பை அதிகரிக்குமாறும் அண்மையில் உத்தரவிட்டார்
இதற்கு அமெரிக்காவும் தென் கொரியாவும் பதிலளிக்கையில், தனது நட்புகளுக்கு எதிராக வட கொரியா அணுவாயுதத்தைப் பிரயோகித்தால், அணுவாயுத பதிலடியை வட கொரியா எதிர்கொள்ளும் எனவும் தற்போதைய வட கொரிய அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.