பாஸ்பரஸ் குண்டுகள் வீச்சு... ரஷ்யா மீது உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு
09 May,2023
கிழக்கு உக்ரைன் நகரமான பக்முத் மீது மிகவும் கொடிய பாஸ்பரஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. அதற்கான வீடியோவையும் உக்ரைன் வெளியிட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஒரு ஆண்டை தாண்டியும் நடைபெற்று வரும் போர் இப்போது மேலும் உக்கிரமடைந்துள்ளது.
உக்ரனைின் பல்வேறு நகரங்கள் ரஷ்யாவின் தாக்குதலால் உருக்குலைந்து போயுள்ளன. ஆனாலும் உக்ரைன் பின்வாங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடும் என உலக நாடுகள் அஞ்சிக் கொண்டிருந்த நிலையில் ரஷ்யா வேறு விதமான தாக்குதலை அரங்கேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா உக்ரைனில் உள்ள பக்முத் நகரின் மீது பாஸ்பரஸ் குண்டை வீசியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. அது தொடர்பான வீடியோவையும் உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. உக்ரேனிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட ட்ரோன் காட்சிகளில் பக்முத் நகரம் பற்றி எரிவதைக் காண முடிகிறது. அந்த காணொளியில் நகரில் வெள்ளை பாஸ்பரஸ் மழை பொழிவது போல் தெரிகிறது.
பாஸ்பரஸ் குண்டு எவ்வளவு ஆபத்து?
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவது போர்க் குற்றமாகக் கருதப்படுகிறது. பாஸ்பரஸ் குண்டு, வெட்டவெளியில் விழுந்தால், அது நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் சுற்றளவுக்கு பரவும். இந்த குண்டுகள் தீர்ந்து போகும் வரை அல்லது அந்த இடத்தில் ஆக்ஸிஜன் முழுமையாக தீர்ந்து போகாத வரை எரிந்து கொண்டே இருக்கும். அவை வேகமாக பரவி ஆகிசிஜனோடு கலந்து அதிக உஷ்ணமுள்ள தீயை உருவாக்கும். அதை அணைப்பது மிகவும் கடினம். இதற்கு முன்பும் கூட, ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளை உக்ரைன் மீது பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இப்போது உக்ரைன் வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளது.