சூடானில் வெளிநாட்டவர்கள் வெளியேறுவதற்கு இருதரப்பும் ஒப்புதல்
24 Apr,2023
சூடான் உள்நாட்டு போர்சூடான் உள்நாட்டு போர்
இந்தியா, கனடா, குவைத், உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 158 பேர், சவுதி கடற்படை கப்பல் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான சண்டை தீவிரமடைந்த நிலையில், வெளிநாட்டவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்க இருதரப்பும் முன்வந்துள்ளன.
சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் உள்நாட்டு போராக வெடித்தது. இதில், சாமானியர்கள் உட்பட சுமார் 400 பேர் உயிரிழந்தனர். போரின் ஒரு பகுதியாக சூடான் தலைநகர் கார்டூம் சர்வதேச விமான நிலையத்தை துணை ராணுவம் கைப்பற்றியது. இதனால், விமானப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே ரமலான் பண்டிகையை ஒட்டி, மனிதாபிமான அடிப்படையில், 72 மணிநேரம் தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. எனினும், இரு தரப்பிலும் சண்டை ஓய்வதற்கான அறிகுறி தென்படவில்லை. இந்நிலையில், சூடானில் உள்ள மற்ற நாட்டவர்கள் வெளியேற உதவுவதாக ராணுவம் அறிவித்தது. இதற்கு சர்வதேச விமான நிலையத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள துணை ராணுவப் படையும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தருணத்தை பயன்படுத்தி, தங்கள் நாட்டினரை மீட்க உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே, சூடானில் இருந்து இந்தியா, கனடா, குவைத், உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 158 பேர், சவுதி கடற்படை கப்பல் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.